உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் தெளிவுரை

பொருள்

வினைத்திட்பம்

ஒரு தொழிலின் திட்பம் என்று சொல்வப்படுவது ஒருவனுடைய மனத்தின் திட்பமே (உறுதியே) ஆகும்; மற்றவை எல்லாம் வேறானவை. 1

இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்தபின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத் திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம். 2

செய்யும் செயலை முடிவில் வெளிப்படும்படியாகச் செய்யும் தகுதியே ஆண்மையாகும்; இடையில் வெளிப்பட்டால் நீங்காத துன்பத்தைக் கொடுக்கும். 3

இச்செயலை இவ்வாறு செய்து முடிக்கலாம் என்று சொல்லுதல் எவர்க்கும் எளியனவாம்; சொல்லியபடி செய்து முடித்தல் அரியனவாம். 4

செயல் திறனால் பெருமை பெற்று உயர்ந்தவரின் வினைத் திட்பமானது, நாட்டை ஆளும் அரசனிடத்திலும் எட்டி மதிக்கப்பட்டு விளங்கும். 5

எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால், அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர். 6

உருளும் பெரிய தேர்க்கு அச்சில் இருந்து தாங்கும் சிறிய ஆணிபோன்றவர்கள் உலகத்தில் உள்ளனர்; அவர்களுடைய உருவின் சிறுமையைக் கண்டு இகழக்கூடாது. 7

மனம் கலங்காமல் ஆராய்ந்து துணிந்து ஏற்ற தொழிலைச் சோர்வு கொள்ளாமல் காலந் தாழ்த்தாமல் செய்து முடிக்க வேண்டும். 8

(முடிவில்) இன்பம் கொடுக்கும் தொழிலைச் செய்யும்போது துன்ப மிக வந்தபோதிலும் துணிவு மேற்கொண்டு செய்து முடிக்க வேண்டும். 9

வேறு எத்தகைய உறுதி உடையவராக இருந்தாலும், செய்யும் தொழிலில் உறுதி இல்லாதவரை உலகம் விரும்பிப் போற்றாது. 10

136