திருக்குறள் தெளிவுரை
பொருள்
அவை அஞ்சாமை
சொற்களின் தொகுதி அறிந்த தூய்மை உடையவர் அவைக்களத்தின் வகையினை அறிந்து, வல்லவரின் அவையில் வாய் சோர்ந்து பிழை சொல்லமாட்டார். 1
கற்றவரின்முன் தாம் கற்றவைகளை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்லவல்லவர், கற்றவர் எல்லாரிலும் கற்றவராக மதித்துச் சொல்லப்படுவர். 2
பகைவர் உள்ள போர்க்களத்தில் (அஞ்சாமல் சென்று) சாகத் துணிந்தவர் உலகத்தில் பலர்; கற்றவரின் அவைக்களத்தில் அஞ்சாமல் பேசவல்லவர் சிலரே. 3
கற்றவரின்முன் தாம் கற்றவைகளை அவருடைய மனத்தில் பதியுமாறு சொல்லி, மிகுதியாகக் கற்றவரிடம் அம்மிகுதியான கல்வியை அறிந்து கொள்ள வேண்டும். 4
அவையில் (ஒன்றைக் கேட்டவர்க்கு) அஞ்சாது விடை கூறும் பொருட்டாக நூல்களைக் கற்கும் நெறியில் அளவை நூல் அறிந்து கற்க வேண்டும். 5
அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு? நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு? 6
அவையினிடத்தில் அஞ்சுகின்றவன் கற்ற நூல், பகைவரின் போர்க்களத்தில் அஞ்சுகின்ற பேடியின் கையில் ஏந்திய கூர்மையான வாள் போன்றது. 7
நல்ல அறிஞரின் அவையில் நல்ல பொருளைக் கேட்பவர் மனத்தில் பதியுமாறு சொல்லமுடியாதவர், பல நூல்களைக் கற்றாலும் பயன் இல்லாதவரே. 8
நூல்களைக் கற்றறிந்தபோதிலும் நல்ல அறிஞரின் அவைக்கு அஞ்சுகின்றவர், கல்லாதவரைவிடக் கடைப்பட்டவர் என்று கூறுவர். 9
அவைக்களத்திற்கு அஞ்சித் தாம் கற்றவைகளைக் (கேட்பவர் மனத்தில்) பதியுமாறு சொல்லமுடியாதவர், உயிரோடு வாழ்ந்தாலும் இறந்தவர்க்கு ஒப்பாவர். 10
148