உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் தெளிவுரை

பொருள்

படை மாட்சி

எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய் உள்ள வெற்றி தரும் படை, அரசனுடைய செல்வங்கள் எல்லாவற்றிலும் சிறந்ததாகும். 1

போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமை குன்றினாலும் இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை உடைய படைக்கு அல்லாமல் முடியாது. 2

எலியாகிய பகைக் கூடிக் கடல்போல் ஒலித்தாலும் என்ன தீங்கு ஏற்படும்? பாம்பு மூச்சு விட்ட அளவில் அவை கெட்டழியும். 3

(போர்முனையில்) அழிவு இல்லாததாய், (பகைவருடைய) வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்றுதொட்டு வந்த அஞ்சாமை உடையதே படையாகும். 4

எமனே சினங்கொண்டு தன்மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதே படையாகும். 5

வீரம், மானம், சிறந்த வழியில் நடக்கும் நடக்கை, தலைவரால் நம்பித் தெளியப்படுதல் ஆகிய நான்கு பண்புகளும் படைக்குச் சிறந்தவையாகும். 6

தன்மேல் எதிர்த்துவந்த பகைவரின் போரைத் தாங்கி வெல்லும் தன்மை அறிந்து, அவருடைய தூசிப்படையை எதிர்த்துச் செல்லவல்லதே படையாகும். 7

போர் செய்யும் வீரமும்(எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலும் இல்லையானாலும் படை தன்னுடைய அணி வகுப்பால் பெருமை பெறும். 8

தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும் வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை வெற்றிபெறும். 9

நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே ஆனாலும், தலைமை தாங்கும் தலைவர் இல்லாதபோது படைக்குப் பெருமை இல்லையாகும். 10

156