திருக்குறள் தெளிவுரை
பொருள்
படைச் செருக்கு
பகைவரே! என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நிற்காதீர்கள்; என்னுடைய தலைவன்முன் எதிர்த்து நின்று மடிந்து கல்வடிவாய் நின்றவர் பலர். 1
காட்டில் ஓடும் முயலை நோக்கிக் குறிதவறாமல் எய்த அம்பை ஏந்துதலைவிட, வெட்டவெளியில் நின்ற யானை மேல் எறிந்து தவறிய வேலை ஏந்துதல் சிறந்தது. 2
பகைவரை எதிர்க்கும் வீரத்தை மிக்க ஆண்மை என்று கூறுவர்; ஒரு துன்பம் வந்தபோது பகைவர்க்கும் உதவி செய்தலை அந்த ஆண்மையின் கூர்மை என்று கூறுவர் 3
கையில் ஏந்திய வேலை ஒரு யானையின்மேல் எறிந்து துரத்திவிட்டு, வேறு வேல் தேடி வருகின்றவன் தன் மார்பில் பட்டிருந்த வேலைக் கண்டு பறித்து மகிழ்கின்றான். 4
பகைவரைச் சினந்து நோக்கிய கண், அவர் வேலைக் கொண்டு எறிந்தபோது மூடி இமைக்குமானாலும், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ? 5
வீரன் கழிந்த தன் நாட்களைக் கணக்கிட்டு. விழுப்புண் படாத நாட்களை எல்லாம் பயன்படாமல் தவறிய நாட்களுள் சேர்ப்பான். 6
பரந்து நிற்கும் புகழை விரும்பி, உயிர்வாழ்வையும் விரும்பாத வீரர், வீரக் கழலைக் காலில் கட்டிக் கொள்ளுதல் அழகு செய்யும் தன்மையுடையதாகும். 7
போர் வந்தால் உயிரின்பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர், அரசன் சினந்தாலும் தம்முடைய சிறப்புக் குன்றாதவர் ஆவர். 8
தாம் உரைத்த சூள் தவறாதபடி போர்செய்து சாக வல்லவரை, அவர் செய்த பிழைகாகத் தண்டிக்க வல்லவர் யார்? 9
தம்மைக் காத்த தலைவருடைய கண்கள் நீர் பெருக்குமாறு சாகப் பெற்றால் சாவு இரந்தாவது பெற்றுக்கொள்ளத்தக்க பெருமை உடையதாகும். 10