திருக்குறள் தெளிவுரை
பொருள்
புல்லறிவாண்மை
அறிவில்லாமையே இல்லாமை பலவற்றுள்ளும் கொடிய இல்லாமையாகும்; மற்ற இல்லாமைகளை உலகம் அத்தகைய இல்லாமையாகக் கருதாது. 1
அறிவில்லாதவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்குக் காரணம், வேறொன்றும் இல்லை; அந்தப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும். 2
அறிவில்லாதவர் தம்மைத் தாமே துன்புறுத்தும் துன்பம் அவருடைய பகைவர்க்கும் செய்ய முடியாத அளவினதாகும். 3
புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால், யாம் அறிவுடையேம்' என்று ஒருவன் தன்னைத்தானே மதித்துக் கொள்ளும் செருக்காகும். 4
அறிவில்லாதவர் தாம் கல்லாத நூல்களையும் கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாக்கும். 5
தம்மிடத்தில் உள்ள குற்றத்தை அறிந்து நீக்காத போது, உடம்பில் மறைப்பதற்குரிய பகுதியை மட்டும் ஆடையால் மறைத்தல் புல்லறிவாகும். 6
அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சோர்ந்து வெளிப்படுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்துகொள்வான். 7
தனக்கு நன்மையானவற்றைப் பிறர் ஏவினாலும் செய்யாதவனாய், தானாகவும் உணர்ந்து தெளியாதவனாய் உள்ளவனுடைய உயிர் போகுமளவும் ஒரு நோயாகும். 8
அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான்; அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுள்ளவனாய்த் தோன்றுவான். 9
உலகத்தார் உண்டு என்று சொல்வதை இல்லை என்று கூறுகின்ற ஒருவன், உலகத்தில் காணப்படும் ஒரு பேயாக் கருதி விலக்கப்படுவான். 10 7. 10