உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் தெளிவுரை

பொருள்

இகல்

எல்லா உயிர்களுக்கும் மற்ற உயிர்களோடு பொருந்தாமல் வேறுபடுதலாகிய தீய பண்பை வளர்க்கும் நோய் இகல் (மாறுபாடு) என்று சொல்வர் அறிஞர். 1

ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும், தான் இகல் கொண்டு அவனுக்குத் துன்பம் செய்யா திருத்தல் சிறந்தது. 2

ஒருவன் இகல் என்று சொல்லப்படும் துன்பநோயை நீக்கிவிட்டால் அஃது அவனுக்கு அழிவில்லாத நிலையான புகழைக் கொடுக்கும். 3

இகல் என்று சொல்லப்படும் துன்பங்களில் கொடிய துன்பம் கெட்டுவிட்டால், அஃது ஒருவனுக்கு இன்பங்களில் சிறந்த இன்பத்தைக் கொடுக்கும். 4

இகலை எதிர்த்து நிற்காமல் அதன் எதிரே சாய்ந்து நடக்க வல்லவரை வெல்லக் கருதுகின்ற ஆற்றல் உடையவர் யார்? 5

இகல் கொள்வதால் வெல்லுதல் இனியது என்று கருதுகின்றவனுடைய வாழ்க்கை தவறிப்போதலும் அழிதலும் விரைவில் உள்ளனவாம். 6

இகலை விரும்புகின்ற தீய அறிவை உடையவர் வெற்றி பொருந்துதலுக்குக் காரணமான உண்மைப் பொருளை அறியமாட்டார். 7

இகலுக்கு எதிரே சாய்ந்து நடத்தல் ஒருவனுக்கு ஆக்கமாகும்; அதனை எதிர்த்து வெல்லக் கருதினால் கேடு அவனிடம் வரக் கருதும். 8

ஒருவன் தனக்கு ஆக்கம் வரும்போது இகலைக் கருதமாட்டான்; தனக்குக் கேடு தருவித்துக் கொள்ளும்போது அதனை எதிர்த்து வெல்லக் கருதுவான். 9

ஒருவனுக்கு இகலால் துன்பமானவை எல்லாம் உண்டாகும்; அதற்கு மாறான நட்பால் நல்ல நீதியாகிய பெருமித நிலை உண்டாகும். 10

174