திருக்குறள் தெளிவுரை
பொருள்
வரைவின் மகளிர்
அன்பினால் விரும்பாமல் பொருள் காரணமாக விரும்புகின்ற பொதுமகளிர் பேசுகின்ற இனிய சொல், ஒருவனுக்குத் துன்பத்தைக் கொடுக்கும். 1
கிடைக்கக்கூடிய பயனை அளந்து பார்த்து, அதற்கு ஏற்றவாறு இனியசொல் கூறுகின்ற பண்பற்ற பொது மகளிரின் இன்பத்தை ஆராய்ந்து பொருந்தாமல் விட வேண்டும். 2
பொருளையே விரும்பும் பொதுமகளிரின் பொய்யான தழுவுதல், இருட்டறையில், தொடர்பு இல்லாத ஒரு பிணத்தைத் தழுவினாற் போன்றது. 3
பொருள் ஒன்றையே பொருளாகக் கொண்ட பொது மகளிரின் புன்மையான இன்பத்தை, அருளாகிய சிறந்த பொருளை ஆராயும் அறிவுடையோர் பொருந்தமாட்டார். 4
இயற்கை யறிவின் நன்மையால் சிறப்புற்ற அறிவுடையோர், பொருள் தருவார் எல்லார்க்கும் பொதுவாக இன்பம் தரும் மகளிரின் புன்மையான நலத்தைப் பொருந்தார். 5
அழகு முதலியவற்றால் செருக்குக்கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொதுமகளிரின் தோளை, தம் நல்லொழுக்கத்தைப் போற்றும் சான்றோர் பொருந்தார். 6
நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறு பொருள்களை விரும்பிக் கூடும் பொதுமகளிரின் தோளைப் பொருந்துவர். 7
வஞ்சம் நிறைந்த பொதுமகளிரின் சேர்க்கை, ஆராய்ந்தறியும் அறிவு இல்லாதவர்க்கு அணங்கு தாக்கு (மோகினி மயக்கு) என்று கூறுவர். 8
ஒழுக்க வரையறை இல்லாத பொதுமகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும். 9
இருவகைப்பட்ட மனம் உடைய பொதுமகளிரும் கள்ளும் சூதுமாகிய இம் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும். 10