திருக்குறள் தெளிவுரை
பொருள்
சூது
வெற்றியே பெறுவதானாலும் சூதாட்டத்தை விரும்பக் கூடாது. வென்ற வெற்றியும், தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுங்கினாற் போன்றது. 1
ஒரு பொருள்பெற்று நூறுமடங்கு பொருளை இழந்துவிடும் சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ? 2
ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் பொருளை இடைவிடாமல் கூறிச் சூதாடினால், பொருள் வருவாய் அவனைவிட்டு நீங்கிப் பகைவரிடத்தில் சேரும். 3
ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைப்போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை. 4
சூதாடு கருவியும் ஆடும் இடமும் கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருளும்உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆய்விடுவர். 5
சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப்பட்டவர், வயிறு நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவர். 6
சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால், அது அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான நற்பண்பையும் கெடுக்கும். 7
சூது, உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச் செய்யும். 8
சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும். 9
பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை வளர்க்கும் சூதாட்டம்போல், உடல் துன்பப்பட்டு வருந்த வருந்த உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும். 10
190