திருக்குறள் தெளிவுரை
இன்பம்
குறிப்பறிதல்
இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும்; அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம்; மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும். 1
கண்ணால் என்னை நோக்கிக் களவு கொள்கின்ற கருங்கிய பார்வை காமத்தில் நேர்பாதி அன்று; அதைவிடப் பெரிய பகுதியாகும். 2
என்னை நோக்கினாள்; யான் கண்டதும், நோக்கித் தலை குனிந்தாள்: அது அவள் வளர்க்கும் அன்பினுள் வார்க்கின்ற நீராகும். 3
யான் நோக்கும்போது அவள் நிலத்தை நோக்குவாள்; யான் நோக்காதபோது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள். 4
என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத்தன்மையே அல்லாமல். ஒரு கண்ணைச் சுருக்கினவள்போல் என்னைப் பார்த்துத் தனக்குள் மகிழ்வாள். 5
புறத்தே அயலார்போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும் அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும். 6
பகைகொள்ளாத கடுஞ்சொல்லும் பகைவர்போல் பார்க்கும் பார்வையும் புறத்தே அயலார்மேல் இருந்து அகத்தே அன்பு கொண்டவரின் குறிப்பாகும். 7
யான் நோக்கும்போது அதற்காக அன்பு கொண்டவளால் மெல்லச் சிரிப்பாள்; அசையும் மெல்லிய இயல்பை உடைய அவளுக்கு அப்போது ஓர் அழகு உள்ளது. 8
புறத்தே அயலார்போல் அன்பில்லாத பொதுநோக்கம் கொண்டு பார்த்தல், அகத்தே காதல் கொண்டவரிடம் உள்ள ஓர் இயல்பாகும். 9
கண்களோடு கண்கள் நோக்கால் ஒத்திருந்து அன்பு செய்யுமானால் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல்லாமற் போகின்றன. 10
224