உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் தெளிவுரை

இன்பம்

நலம் புனைந்துரைத்தல்

அனிச்சப்பூவே! நல்ல மென்மைத்தன்மை பெற்றிருக்கின்றாய்! நீ வாழ்க! யாம் விரும்பும் காதலி உன்னைவிட மெல்லிய தன்மை உடையவள். 1

நெஞ்சமே! இவளுடைய கண்கள் பலரும் காண்கின்ற மலர்களை ஒத்திருக்கின்றன என்று நினைத்து ஒத்த மலர்களைக் கண்டால் நீ மயங்குகின்றாய்! 2

மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேனி; முத்தே பல்; இயற்கை மணமே மணம்; வேலே மை உண்ட கண். 3

குவளை மலர்கள் காணும் தன்மைபெற்றுக் கண்டால், "இவளுடைய கண்களுக்கு யாம் ஒப்பாகவில்லையே" என்று தலைகவிழ்ந்து நிலத்தை நோக்கும். 4

அவள் தன் மென்மை அறியாமல் அனிச்ச மலர்களைக் காம்பு களையாமல் சூடினாள்; அவற்றால் நொந்து வருந்தும் அவளுடைய இடைக்குப் பறைகள் நல்லனவாய் ஒலியா. 5

விண்மீன்கள் திங்களையும் இவளுடைய முகத்தையும் வேறுபாடு கண்டு அறியமுடியாமல் தம் நிலையில் நிறகாமல் கலங்கித் திரிகின்றன. 6

குறைந்த இடமெல்லாம் படிப்படியாக நிறைந்து விளங்குகின்ற திங்களிடம் உள்ளதுபோல் இந்த மாதர் முகத்தில் களங்கம் உண்டோ? இல்லையே! 7

திங்களே! இம் மாதரின் முகத்தைப்போல் ஒளி வீச உன்னால் முடியுமானால், நீயும் இவள்போல் என் காதலுக்கு உரிமை பெறுவாய். 8

திங்களே! மலர்போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றாதே. 9

அனிச்ச மலரும் அன்னப்பறவையின் இறகும் ஆகிய இவைகள் மாதரின் மெல்லிய அடிகளுக்கு நெருஞ்சிமுள் போன்றவை. 10

228