திருக்குறள் தெளிவுரை
இன்பம்
பசப்புறு பருவரல்
விரும்பிய காதலர்க்கு அன்று பிரிவை உடன்பட்டேன்: பிரிந்தபின் பசலை உற்ற என் தன்மையை வேறு யார்க்குச் சென்று சொல்வேன்? 1
அந்தக் காதலர் உண்டாக்கினார் என்னும் பெருமிதத்தோடு இந்தப் பசலைநிறம் என்னுடைய மேனிமேல் ஏறி ஊர்ந்து பரவி வருகின்றது. 2
காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம் மாறாகக் கொடுத்துவிட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடமிருந்து பெற்றுக்கொண்டார். 3
யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ? 4
அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலைநிறம் வந்து படர்கின்றது. 5
விளக்கினுடைய மறைவைப் பார்த்துக் காத்திருக்கின்ற இருளைப்போலவே, தலைவனுடைய தழுவுதலின் சோர்வைப் பசலை பார்த்துக் காத்திருக்கின்றது. 6
தலைவனைத் தழுவிக் கிடந்தேன்; பக்கத்தே சிறிது அகன்றேன்; அவ்வளவிலேயே பசலை நிறம் அள்ளிக் கொள்வதுபோல் வந்து பரவிவிட்டதே. 7
'இவள் பிரிவால் வருந்திப் பசலைநிறம் அடைந்தாள்' என்று பழி சொல்வதே அல்லாமல், 'இவளைக் காதலர் விட்டுப் பிரிந்தார்' என்று சொல்பவா இல்லையே! 8
பிரிவுக்கு உடன்படச் செயத காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால். என்னுடைய மேனி உள்ளபடி பசலைநிறம் அடைவதாக. 9
பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமலிருப்பாரானால், யான் பசலையுற்றதாகப் பெயரெடுத்தல் நல்லதே. 10
242