உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் தெளிவுரை

இன்பம்

நினைந்தவர் புலம்பல்

நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் (உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும்) கள்ளைவிடக் காமம் இன்பமானதாகும். 1

தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமற் போகின்றது! அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும். 2

தும்மல் வருவதுபோலிருந்து வாராமல் அடங்குகின்றதே! என் காதலர் என்னை நினைப்பவர்போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ? 3

எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே! (அது போலவே) யாமும் அவருடைய தெஞ்சத்தில் தீங்காமல் இருக்கின்றோமோ? 4

தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல்கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வருவதைப்பற்றி நாணமாட்டாரோ! 5

காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக்கொள்வதால்தான் உயிரோடிருக்கின்றேன்; வேறு எதனால் உயிர்வாழ்கின்றேன்? 6

(காதலரை) மறந்தரியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆவேனோ? 7

காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என் மேல் சினங் கொள்ளார்: காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ? 8

'நாம் இருவரும் வேறு அல்லேம்' என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தவை மிக நினைந்து என் இனிய உயிர் அழிகின்றது. 9

திங்களே! பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக 10