உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் தெளிவுரை, மு. வ.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் தெளிவுரை

இன்பம்

உறுப்புநலன் அழிதல்

இத் துன்பத்தை நமக்கு விட்டுவிட்டுத் தொலைவில் உள்ள நாட்டுக்குச் சென்ற காதலரை நினைந்து அழுதமையால் கண்கள் அழகு இழந்து நறுமலர்களுக்கு நாணிவிட்டன. 1

பசலைநிறம் அடைந்து நீர் சொரியும் கண்கள், நாம் விரும்பிய காதலர் நமக்கு அன்பு செய்யாத தன்மையைப் (பிறர்க்குச்) சொல்வனபோல் உள்ளன. 2

கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், (இப்போது மெலிந்து) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவைபோல் உள்ளன. 3

துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன. 4

வளையல்களும் கழன்று பழைய அழகும் கெட்டு வாடிய தோள்கள். (என் துன்பம் உணராத) கொடியவரின் கொடுமையைப் பிறர் அறியச் சொல்கின்றன. 5

வளையல்கள் கழன்று தோள்களும் மெலிவடைவதால் (அவற்றைக் காண்போர்) காதலரைக் கொடியவர் என்று கூறுவதைக் கேட்டு வருந்துகின்றேன். 6

நெஞ்சே! கொடியவர் என்று சொல்லப்படுகின்ற காதலர்க்கு என் மெலிந்த தோள்களின் ஆரவாரத்தை உரைத்து, அந்த உதவியால் பெருமை அடைவாயோ! 7

தழுவிய கைகளைத் தளர்த்தியவுடனே, பைந்தொடி அணிந்த காதலியின் நெற்றி, (அவ்வளவு சிறியதாகிய பிரிவையும் பொறுக்காமல்) பசலை நிறம் அடைந்தது. 8

தழுவுதலுக்கு இடையே குளிர்ந்த காற்று நுழையக் காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலைநிறம் அடைந்தன. 9

காதலியின் ஒளிபொருந்திய நெற்றி, பசலைநிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய கண்களின் பசலையும் துன்பம் அடைந்துவிட்டது. 10

252