திருக்குறள் தெளிவுரை
இன்பம்
புலவி
(ஊடும்போது அவர் அடைகின்ற) துன்பநோயைச் சிறிது காண்போம்; அதற்காக அவரைத் தழுவாமலிருந்து பிணங்குவாயாக. 1
உப்பு, உணவில் அளவோடு அமைந்திருப்பதைப் போன்றது ஊடல்; ஊடலை அளவுகடந்து நீட்டித்தல், அந்த உப்பு சிறிதளவு மிகுதியாக இருப்பதைப் போன்றது. 2
தம்மோடு பிணங்கியவரை ஊடலுணர்த்தித் தழுவாமல் விடுதல், துன்பத்தால் வருந்தியவரை மேலும் துன்பநோய் செய்து வருத்தினாற் போன்றது. 3
பிணங்கியவரை ஊடலுணர்த்தி அன்பு செய்யாமலிருத்தல், முன்னமே வாடியுள்ள கொடியை அதன் அடியிலே அறுத்தல் போன்றது. 4
நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சில் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும். 5
பெரும்பிணக்கும் சிறுபிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல பயன்படாததாகும். 6
கூடியிருக்கும் இன்பம் இனிமேல் நீட்டிக்காதோ என்று ஏங்கி எண்ணுவதால் ஊடியிருத்தலினும் காதலர்க்கு ஒரு வகைத் துன்பம் இருக்கின்றது. 7
நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன? 8
நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது. 9
ஊடல் கொண்டபோது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே. 10
266