திருக்குறள் தெளிவுரை
இன்பம்
புலவி நுணுக்கம்
பரத்தமை உடையாய்! பெண்தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள் ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன். 1
காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய்திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார். 2
கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும் 'நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்குக் காட்டுவதற்காகச் சூடினீர்' என்று சினம் கொள்வாள். 3
'யாரையும்விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம்' என்று சொன்னேனாக, 'யாரைவிட? யாரை விட?' என்று கேட்டு ஊடல் கொண்டாள். 4
'இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம்' என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள். 5
'நினைத்தேன்' என்று கூறினேன்; 'நினைப்புக்குமுன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர்? என்று என்னைத் தழுவாமல் ஊடினாள். 6
யான் தும்மினேனாக அவள் 'நூறாண்டு' என வாழ்த்தினாள். உடனே அதைவிட்டு 'யார் நினைத்ததால் தும்மினீர்?' என்று கேட்டு அழுதாள். 7
அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள 'உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ' என்று அழுதாள். 8
ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், 'நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர்' என்று சொல்லிச் சினம் கொள்வாள். 9
அவளுடைய அழகை நினைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், 'நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாலாம் பார்க்கின்றீர்?' என்று சினம் கொள்வாள். 10