பக்கம்:திருக்குறள் தெளிவு-உரைநூல்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்முகம் பொதுமறை தந்த - தேவன் பொய் சொல்லாப் புலவன் என்று கவிமணியால் பாராட்டப்பெறும் திருவள்ளுவர் ஒர் உலகப் பெருங் கவிஞர்; ஒப்பற்ற கவிஞர். அவர் உள்ளத்துத் தோன்றிய அழகிய கருத்துகள் மக்கள் வாழ வழிகாட் டும் பொய்யா மொழிகள். இவை நாடு, மொழி, இனம், அறம், சமயம் இவற்றிக்கு அப்பாற்பட்ட பொன் மொழிகள். வள்ளுவர் பெருமான் தமிழன்னை பெற்றெடுத் தவப் பு தல்வர். அவரை உலகுக்குக் கொடுத்துத் தமிழ் நாடு வான் புகழை ஈட்டிக் கொண்டது. மன்பதைக்கு வாழ்வியலை உணர்த்துவதற்காக எழுந்தது அவரது நூல். இதுவே அவரது தலையாய நோக்கம். எனினும் அரசியலை அறிய விரும்புவார்க்கு ஓர் அரசியல்நூல்; ஞானத்தை விரும்புவார்க்கு ஒரு ஞானக் கருவூலம்; கவிச்சுவை விரும்புவார்க்கு ஒரு காவியம். அக இலக்கியச் சுவையை விரும்புவார்க்கு ஓர் அருமைப் பெட்டகம்; பேரின்பம் நாடுவோர்க்கு ஒரு பேரின்ப நூல். மக்களின் வயது நிலைகட்கேற்ப, மேற்கொண்ட வாழ்க்கை நெறிகட்கேற்ப ஒளி காட்டும் கலங்கரை விளக்கு. இம்மைக்கும் இன்பம் நல்கி மறுமைக்கும் வீடுபேற்றினை அளிக்கும் நூல்.