பக்கம்:திருக்குறள் தெளிவு-7.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

— 68 —

கெட்டவழியில் பொருள் தேடாவிட்டால் பலர்க்கும் பகுத்துக் கொடுக்கும் அளவு பொருள் சேர்வது எப்படி? நல்ல வழியில் பொருள் தேடும் நல்லோர் சிலர், தம்மையே நன்கு பாது காத்துக் கொள்ள முடியாமல் தவிக்கின்றார்களே! அவர்கள் பலர்க்கும் பகுத்துக் கொடுப்பது எப்படி? செல்வம் சேர்ந்திருந்தாலும், பலர்க்கும் பகுத்துக்கொடுத்துக் கொண்டேயிருந்தால் அக்குடும்பம் விரைவில் நொடித்து விடாதா? பின்பு இடையராமல் எப்போதும் விளங்குவது எப்படி? என்பவற்றை யெல்லாம் எண்ணும் போது இக்குறளில் நம்பிக்கை தோன்றாது தானே! இதனைச்சற்று ஆராய்வோம்.

திருவள்ளுவர் இந்தக் குறளில் தெரிவித்திருப்பது என்ன? நல்ல வழியில் பொருள் ஈட்ட வேண்டும்; அப்பொருளை, (பெற்றோர், பெண்டாட்டி, பிள்ளை, துறந்தார், துவ்வா தவர், இறந்தார், தென்புலத்தார், தெய்வம், விருந்து, சுற்றத்தார், தான் என்னும் பலர்க்கும் பயன்படுத்தி வாழவேண்டும் என்பது தானே! இல்வாழ்வான் தன்னையும், தன் பெற்றோர், பெண்டாட்டி, பிள்ளைகளையும் காப்பாற்ற வேண்டும் என்றும் திருவள்ளுவர் கூறியிருப்பதால், ஒருவன் தன் செல்வம் முழுவதையும் பிறர்க்கே செலவிட்டுத் தன் குடும்பத்தை அழித்துவிட வேண்டும் என்பதன்று; போதுமான அளவு தன் குடும்பத்தையும் காப்பாற்றி, இயன்றவரை ஏனையோரையும் ஆதரிக்க வேண்டும் என்பது இனிது புலப்படுகின்ற தல்லவா? எனவே பிறர்க்கு ஓரளவு உதவுவதால் தன் குடும்பம் நொடித்து விடும் என்பதற்கு இடமில்லை. பலர்க்கும் உதவிப் பலருடைய நன் மதிப்பையும் பெறுவதால், தப்பித்தவறித் தன் குடும்பத்திற்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் அப்பலரும் உதவுவார்கள் பலருள் சிலர் கூடவா நன்றி பாராட்ட மாட்டார்கள்? பிறர்க்கு உதவாதவனுடைய குடும்பத்திற்கு ஒரு துன்பம் ஏற்பட்டால், அதிலும் அவன் கெட்டவழியில் பொருள் ஈட்டியிருப்பானேயானால் அவன் குடும்பத்தை அனைவரும் வெறுத்து ஒதுக்குவார்கள்.

மேலும், கெட்ட வழியில் மிக்க பொருள் திரட்டி வாழ்வது வெள்ளத்தை நம்பி வாழ்வது போலாகும். வெள்ளம் எப்போதும் வருமா? ஆனால், நல்ல வழியில் பொருள் ஈட்டி வாழ்வதோ, ஊற்று நீரை நம்பி வாழ்வது போலாகும். ஊற்று எப்போதும் சுரக்குமன்றோ? எனவே, 'நல்வழியில் பொருளீட்டி, நாலாபேர்க்கும் உதவி வாழ்வானுடைய குடும்பம் தொடர்ந்து விளக்கம் பெறும்' என்னும் இக்குறட் கருத்து இப்போது ஏற்புடையதாய்த் தோன்றுமே!

எஞ்சல்-எழுவாய்; இல்-பயனிலை, பாத்து என்னும் வினை யெச்சம் ஊண் என்னும் முதல் நிலை திரிந்த தொழிற்பெயரைக் கொண்டு முடிந்தது. பாத்து-பகுத்து.

இனி முறையே மணக்குடவர் உரையும், பரிமேலழகர் உரையும் வருமாறு: