பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைச்சியல் 159 73. அவையில் நடுங்காது பேசுதல் சொற்கூட்டத்தைக் கற்றறிந்த தூயவர், பேசும் வகை அறிந்து வெல்லவல்ல சொற்களை வாய் சோராமல் பேசுவார். 721 கற்றவர்முன்னே தாம் கற்ற கருத்துக்களை வெற்றிபெற எடுத்து மொழியவல்லவர், கற்றவருக்குள் சிறக்கக் கற்றவராகக் கருதப்படுவர். 722 பகைக் களத்திலே போரிட்டுச் சாகக் கூடியவர் உலகில் எளிதாய்க் கிடைப்பர்; கற்றார் அவையிலே அஞ்சாது பேசுபவர் அரிதாகவே யிருப்பர். 723 கற்றவர்முன் தாம் கற்றவற்றைப் பதியுமாறு சொல்லி, தாம் கற்றவற்றினும் மிகுதியாகக் கற்றவரிடம் அம் மிகுதியான கல்வியைக் கேட்டு அறிக. 724 அவையிலே அஞ்சாது பதில் தந்து பேசுவதற்காக, கற்கும் முறைப்படி அளவை (ஆதார) நூற்களை ஆராய்ந்தறிந்து கற்க வேண்டும். 725 ஆண்மையுடையவர் அல்லாதவர்க்கு வாளோடு என்ன உறவு? நுண்ணறிவினரின் அவையிலே பேச அஞ்சுபவர்க்கு நூற்களோடு என்ன உறவு? 726 ஆன்றோர் அவையில் பேச அஞ்சுபவன் கற்ற நூல், பகைக் களத்திலே பேடிகையில் ஏந்திய கூர் வாள் போன்றது. 727 நல்லோர் அவையிலே நன்கு பதியுமாறு கருத்துக்களை விளக்கத் தெரியாதவர், பலதுறை நூற்களைக் கற்றிருப்பினும் பயன் இல்லாதவரே. 728 கற்றுணர்ந்தும் நல்லார் அவையிலே பேச அஞ்சுபவர், கல்லாத மூடரினும் கடைப்பட்டவர் என்று சொல்வர். 729 அவைக் களத்திற்கு அஞ்சி நடுங்கி, தாம் கற்றறிந்த கருத்துக்களை வெற்றிபடச் சொல்லத் தெரியாதவர், உயிருடன் இருக்கின்றார் எனினும் இறந்தவரோடு நிகராவர். 730