பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துறவறவியல் 63 26. ஊன் உண்ணாது மறுத்தல் தன் உடம்பு பருப்பதற்காகத் தான் பிறிதோர் உயிரின் உடம்பைத் தின்னுபவன் எவ்வாறு அருளைக் கையாள முடியும்? 251 பொருளை ஆளுதல் அதனை வைத்துக் காப்பாற்றாதவர்க்கு இல்லை; அருளை ஆளுதல் ஊன் உண்ணுபவர்க்கு அங்கே இல்லையாம். 252 ஓர் உயிரின் ஊனை உண்டு சுவை கண்டாரின் உள்ளம், கொலைக் கருவியைக் கையில் கொண்டவரின் உள்ளம் போல் நல்லறத்தில் ஊக்கம் கொள்ளாது. 253 அருளற்ற செயல் எது என்றால், கொல்லக் கூடாத உயிர்களைக் கொல்லுதல் ஆகும் கொன்ற அவ்வுடம்பைத் தின்பது பொருளற்ற செயலாகும். 254 உடம்பில் உயிர் நிலைத்திருப்பது ஊன் உண்ணாமையைக் குறியாகக் கொண்டது; ஊன் உண்டால் உண்டவனை நரகம் விழுங்கி வெளிவிடாது. 255 உலகினர் உண்ணுவதற்காக உயிர்களைக் கொல்ல மாட்டாரெனில், விலைப் பணத்திற்காக ஊன் விற்பவர் எவரும் இரார். 256 புலால் புசியாதிருக்க வேண்டும்; உண்மையுணர்ந்தவர் இருப்பாராயின், அப்புலால் வேறு ஒர் உயிரின் புண் என்பது விளங்கும். 257 பிழையின் நீங்கிய பேரறிவாளர், ஓர் உயிரினிடமிருந்து பிரிந்துபோன உடம்பை உண்ண மாட்டார். 258 இறைச்சி முதலாகிய அவிப் பொருள்களை வேள்வித் தீயில் கொட்டி ஆயிரக்கணக்கான வேள்விகள் செய்வதை விட, ஒன்றின் உயிரைக் கொன்று உடலைத் தின்னாதிருத்தல் நல்லது. 259 ஒருயிரையும் கொல்லாதவனாய்ப் புலால் உண்ணவும் மறுத்தவனை உலகத்து உயிர்களெல்லாம் கைகுவித்து வணங்கும். 260