பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/308

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 307 ஆனால், மனத்தளவில் இந்தக் குணங்களைக் கொண்டிருந்தால்தான் மகிமைகளைச் செய்ய முடியும். மற்றவர்களையும் சமமாக நடத்தி, ஒற்றுமையை வளர்த்து. சமாதானத்தை நிலை நிறுத்த முடியும் என்று, ஒப்புரவை மனத்தால் பெறுகிறபோதுதான், உயர்ந்த உலகைப் படைக்க முடியும் என்று உறுதிபடக் கூறுகிறார். 214. ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும். பொருள் விளக்கம்: ஒத்தது - (இயற்கைக் கேற்ப) தனது உடலுக்கு எது ஏற்றது என்பதை அறிவான் = உணர்ந்து அறிந்து கொள்கிறவனே உயிர் வாழ்வான் = உயிர்ப்புடன் வாழ்வான் மற்றையன் = அப்படி வாழத் தெரியாதவன் செத்தாருள் = (நடைப் பிணம்போல) இறந்தாருள் ஒருவராக வைக்கப்படும் = கருதப்படுவார் சொல் விளக்கம்: ஒத்தது - உணர்ந்தறிந்து ஏற்றது; உயிர் = உயிர்ப்பு முற்கால உரை: உலக நடையினை அறிந்து செய்வான், உயிரோடு கூடி வாழ்வானாவான். அஃதறிந்து செய்யாதவன், உயிருடையவனே ஆயினும், செத்தாருள் ஒருவனாகக் கருதப்படும். தற்கால உரை: நாட்டுக்கு ஒத்தச் செயலைச் செய்பவன், உயிரோடு கூடிவாழ்பவன் அச் செயலைச் செய்யாதான், இறந்தவருள் ஒருவனாகக் கருதப்படுவான். புதிய உரை: இயற்கையோடு இயைந்து வாழத் தெரிந்தவன் உயிர்ப்பு சக்தியுடன் வாழ்கிறான். அஃதறியாமல் வாழ்கிறவன் சத்திழந்து நடைப்பிணமாய் வாழ்கிறவனாக மாறி, செத்தவனாகக் காட்சியளிக்கிறான். விளக்கம்: உயிர் என்பது ஆன்மா. காற்று சீவனாக விளங்குகிறபோது அது சீவாத்மா அல்லது உயிர்க்காற்று என்று பெயர் பெறுகிறது.