பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

திருக்குறள் புதைபொருள்


உயிரை இழந்து ஒழுக்கத்தைக் காப்பாற்றிக்கொண்டவன் உள்ளபடியே இறந்தவனாயினும் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் உயிர் வாழ்வான். ஒழுக்கத்தை இழந்து உயிரைக் காப்பாற்றிக்கொண்டவன் உள்ளபடியே உயிரோடு இருப்பினும் கல்ல பிணமாய் நடந்து திரிவான். ஆதலின் காப்பாற்ற வேண்டிய முதல் நிலையில் நிற்பது உயிரல்ல; ஒழுக்கம் என்ற உண்மையை 'உயிரினும்' என்பது உய்த்துண்ரச் செய்கிறது.

ஒருவன் உயிரை இழந்துவிட்டால் அதற்காக அழுது வருந்தும் துன்ப நிலை அவனுக்கு ஏற்படுவதில்லை; அந்நிலை பிறருக்கே ஏற்படும். ஆனால், ஒழுக்கத்தை இழந்து விட்டால், அதற்காக அழுது வருந்தும் துன்பநிலை பிறருக்கு ஏற்படுவதில்லை; அந்நிலை அவனுக்கே ஏற்படும்! என்ற இச் சிறந்த கருத்தை வள்ளுவர் 'உயிரினும்' என்ற சொல்லிற்குள் அழுது, வருந்திப் புகுத்தியிருக்கிறார் என்பதைக் காணும்பொழுது, நமது நெஞ்சமும் நெகிழ்ந்து, வருந்தி, உருகுகிறது.

உயிர் தன்னையுடைய எவர்க்கும் உயர்வு தாழ்வு கற்பித்துக்கொண்டே இருக்கிறது. ஒழுக்கம் அவ்வாறில்லாமல் தன்னையுடைய எவர்க்கும் ஒரே சிறப்பைச் சமமாகத் தந்து வருகிறது. ஆதலின், ஒழுக்கம் உயிரினும் சிறந்ததாகும் என்ற உண்மை 'உயிரினும்' என்ற சொல்லிற் புதைந்து காணப்படுகிறது.

உயிர் தன்னையுடையவனைத் தீவினையினும் செலுத்தித் துன்புறுத்தலாம். ஒழுக்கம் அவ்வாறு செய்யாமல் நல்வழியில் மட்டுமே செலுத்தி அவனுக்குப் பெயரும், புகழும், பெருஞ் சிறப்பும் தருகிறது. ஆதலின் ஒழுக்கம் உயிரினும் பெரிது என்ற இவ்வுண்மையை 'உயிரினும்' என்ற சொல் காட்டிக் கொண்டிருக்கிறது.

நமக்கு நற்றுணை நல்லவர் என்றும், பக்தர்க்கு நற்றுணை பரமன் என்றும் சொல்லக் கேட்டிருக்கிறோம். அம்மாதிரி உயிர்க்கும் ஒரு துணை இருக்கிறது. உயிர்க்கு