பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உயிரினும்...!

13

ஒரு துணையும், உறுதுணையும் ஆவது உலகில் வேறு எதுவு மில்லாமல் ஒழுக்கம் ஒன்றே ஆகும். ஆதலின் உயிர்க்குத் துணையாகின்ற ஒழுக்கம் உயிரினும் சிறந்ததாகிறது என்ற இவ்வுண்மையை உயிரினும் என்ற சொல்லால் அறிந்து மகிழலாம்.

உயிரை இழந்துவிட்ட ஒருவன் உண்மையான பழியைக்கூட இழந்து விடுகிறான்! இது இவ்வுலகில் இன்றும் நாம் காணும் உண்மையாகும். ஆனால், ஒழுக்கத்தை இழந்து விட்ட ஒருவன் தான் செய்யாத பழி பாவங்களைக்கூடச் செய்யவில்லை என்று சொன்னாலும் உலகம் ஒப்பாது. ஆதலின், அவன் இல்லாத பழியையும் ஏற்க நேரிடும். ஆதலின் உயிரினும் சிறந்தது ஒழுக்கம் என்றாகிறது. இவ்வுண்மையை உயிரினும் என்ற சொல்லிற் கண்டு மகிழுங்கள்.

படி இல்லாமல் மாடியும் ஏறலாம், கால் இல்லாமல் நடந்தும் செல்லலாம். ஆனால் ஒழுக்கமில்லாமல் உயர் வடையவே முடியாது. ஆதலின் துன்பம், துயரம், வறுமை ஆகிய இடுக்கண்கள் எத்தனை வந்தாலும் சிறிதும் தளராமல் ஒழுக்கத்தைக் காப்பாற்றியாக வேண்டும். உயிரே போவதாயினும் அஞ்சாது, வீரத்தோடு நின்று போராடி, ஒழுக்கத்தைக் காப்பாற்றியாக வேண்டும் என்பது வள்ளுவர் பெருமானின் கருத்து.

இதுகாறும் கூறிய இவைகளைக் கொண்டு,

         ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
         உயிரினும் ஓம்பப்படும்

என்ற குறளின் பெருமையும், உயிரினும் என்ற சொல்லின் சிறப்பும், உயிரின் தன்மையும், ஒழுக்கத்தின் உயர்வும் ஒருவாறு விளங்கியிருக்கலாம். இது போன்றே பிற குறள்களிலும் புதைபொருள்களைக் காணலாம். ஆகவே, நீங்கள் திருக்குறளைப் படியுங்கள். புலவனாக விளங்க அல்ல; பேச்சாளியாக இருக்க அல்ல; ஒழுக்கமுள்ளவனாக நடக்கப் படியுங்கள். படித்து அதன்படி ஒழுகுங்கள்.

வாழட்டும் தமிழ்ப் பண்பு!