பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



2. கொல்லும் சொல்!

        கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
        சொல்லா நலத்தது சால்பு.

இக்குறள் சான்றாண்மை என்ற தலைப்பின்கீழ் வந்தது. சான்றாண்மை என்பது தமிழகத்தின் சொந்தச் சொத்து. அது எந்த மொழியிலும் மொழிபெயர்க்க முடியாத ஒன்று. சான்றாண்மை என்பது பல நல்ல குணங்கள் அமையப்பெற்ற ஒருவன், அக்குணங்களில் எதுவும் தன்னை விட்டுப் பிரிந்து போய்விடாமல் காப்பாற்றி ஆளும் ஆண்மை எனப்படும். ஆகவே, சான்றாண்மை என்பது உயர்ந்த மக்களின் சிறந்த பண்பு என்றாகிறது.

மக்களின் உயர்ந்த பண்புக்குப் பல நற்குணங்கள் இருந்து தீரவேண்டும். எது இல்லாவிடினும் இரு பெருங்குணங்களேனும் வேண்டும். அவற்றில் ஒன்று, பிற உயிர்களைக் கொல்லாமை; மற்றொன்று, பிறர் தீமைகளைச் சொல்லாமை என்று இக்குறள் கூறுகிறது.

சான்றாண்மைக்குத் திருவள்ளுவர் சொல்லில் ஒன்றும், செயலில் ஒன்றும் விரும்புகிறார் என்பதையும் இக்குறளால் அறிந்து மகிழ்ச்சியடைகிறோம்.

உயிரைக் கொல்லாமையும், தீமையைச் சொல்லாமையும் ஆகிய இவ்விரண்டும் "நலம் தரும்" என்று வள்ளுவர் இக் குறளில் குறிப்பிடுகிறார். இதனை 'நலத்தது' என்ற சொல்லால் அறியமுடிகிறது.

கொலையுண்ட உயிர்களும் சொல்லுண்ட உயிர்களும் பெரிதும் துன்பப்படும். ஆதலின், அப்படிச் செய்யாதிருப்பதே எவ்வுயிர்கட்கும் நல்லது என்பது இக் குறளில் உள்ள 'நலத்தது' என்ற சொல்லின் கருத்து.

கொல்லுகின்றவனைத் தீயசெயலாளன் என்றும், சொல்லுகிறவனைத் தீய சொல்லாளன் என்றும் உலகத்தார் சொல்லிப் பழித்து வெறுத்து ஒதுக்குவர். ஆதலின்