பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

திருக்குறள் புதைபொருள்

நகை கொள்வதுபோல், நிலமும், தன்னைத் தழுவி உழுது விளைவித்து உண்டு வாழ விரும்பாத ஆண்மகனைக் கண்டு நகையாடும் என்பது பொருளமைதியுள்ள ஒரு உயர்ந்த எடுத்துக்காட்டு ஆகும்.

‘நகும்’ என்பதோடு வள்ளுவர் விட்டுவிட்டதிலிருந்து, தன்னைப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியாத ஆண் மகனைக் கண்டு நிலம் நகைப்பதோடு விட்டுவிடும் என்பதும். அவ்வாறே தன்னைப் பயன்படுத்திக்கொள்ள முடியாத கணவனைக் கண்ட நல்லாளும் நகைப்பதோடு விட்டுவிடுவாள் என்பதும் பெறப்படும். இது பெண்மக்களின் தரத்தையே உயர்த்திக் காட்டுவதாக இருக்கிறது.

‘காணின் நகும்’ என்ற சொற்றொடர் கடுங்காட்டு நிலத்தையோ, கணவனற்ற மனைவியையோ சுட்டிக் காட்டாமல் எதிரில் எளிதில் இருப்பவைகளையே சுட்டிக் காட்டி, அவைகளைப் பயன்படுத்திக்கொள்ளத் தெரியாத மக்களைக் கண்டு நகைப்பதைப் புலப்படுத்துவது நமக்குப் பெருமகிழ்ச்சியை அளிக்கிறது. நிலமகளையும் குலமகளையும் இன்பப் பொருளாக்கி ஆண்மகனை இன்பம் துய்ப்பவனாக இக் குறளில் உவமித்திருப்பது வள்ளுவரின் பேரறிவை விளக்குவதாக அமைந்திருக்கிறது.

நல்லாளும் நன்னிலமும் இருந்தும் நல்வாழ்வு வாழாத நாணிலியைக் கண்டு மனைவி சிரிப்பாள், நிலம் சிரிக்கும் என்பது மட்டுமல்ல; இந்த மாநிலமே சிரிக்கும் என்ற கருத்தும் இக் குறளில் அடங்கியே இருக்கிறது. இதனை நிலம் நகும் என்பதாலறியலாம்.

பருவ மங்கையர் பலரிருக்கும் ஊரில், விரும்பும் ஒருவரை மணந்து இவ்வாழ்வு வாழவேண்டும் என்ற மணக் கவலையோ மனக்கவலையோ இன்றி வீணில் திரிந்து வெறு வாழ்வு வாழ்கின்ற இளைஞர்கள் சிலரைக் கண்டால் அந்நல்லாள்கள் இவ்வாறே நகைப்பர் என்ற கருத்தும் இக் குறளில் இல்லாமலில்லை!