பக்கம்:திருக்குறள் புதைபொருள் 1.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

திருக்குறள் புதைபொருள்

வள்ளுவரின் குறளும், அவரது கருத்துமாகும். “கொல்வது தான் பாவம், கொன்றதைத் தின்பது பாவமில்லை” என் பாரது கூற்றை வள்ளுவர் இக்குறளின் மூலம் மறுத்திருப்பதைக் கண்டும் மகிழுங்கள்.

       தினற்பொருட்டாற் கொள்ளாது உலகெனின் யாரும்
       விலைப்பொருட்டால் ஊன்தருவா ரில்



12. செயற்கரிய செய்வார் பெரியர்

        செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
        செயற்கரிய செய்கலா தார்

என்பது ஒரு குறள்.

பெரியவர்கள் பிறரால் செய்தற்கு அரிய காரியங்களைச் செய்வார்கள்; சிறியவர்கள் அத்தகைய அரிய காரியங்களைச் செய்யமாட்டார்கள் என்பது இதன் பொருளாம்.

இதுவரை எல்லோராலும் இவ்வாறே பொருள் கூறப் பெற்று வந்துள்ளது. அவ்விதமாயின் இது மிகைபடக் கூறியதாக முடியும்.

‘செய்வதற்கு அருமையான காரியங்களைச் செய்பவர்களே பெரியவர்கள்’ என்று கூறிவிட்டபொழுதே, சிறியவர்கள் அவ்வாறு செய்ய முடியாதவர்கள் என்று தோன்றுகிறது. மறுபடியும் “சிறியர் செயற்கரிய செய்யார்” என்று கூறியிருக்க வேண்டியதில்லை அல்லவா?

வள்ளுவர் அதனை மறுபடியும் வற்புறுத்திக் கூறவே அவ்வாறு கூறியுள்ளார் என்று கருதுவதும், கூறுவதும் வள்ளுவருக்குப் பெருமை அளிப்பதாக இல்லை. ஆகவே, அதன் உண்மைப் பொருளை அறியவேண்டியிருக்கிறது.