26
அன்று, அரிது, பெரிது, சிறிது, வறிது, நல்லது, தீது என்றே முடிவு கட்டிக் கூறிவந்த வள்ளுவர், இக்குறளில் மட்டும் ஆக்கமும் கேடும் பற்றி எதுவுங் கூறாமல், நம்மையே நினைத்துப் பார்க்கும்படி விட்டுவிட்டது எதன் பொருட்டு? நினைத்தீர்களா? நினைத்துப் பாருங்கள். எந்தெந்த வகையில்தான் நினைப்பது?
அவ்விய நெஞ்சத்தானுக்கு ஆக்கமும், செவ்விய நெஞ்சத்தானுக்கு கேடும் வருமா? எப்படி வரும்? சிந்தித்துப் பார்!
அவ்விய நெஞ்சத்தானுக்கு ஆக்கமும், செவ்வியானுக்குக் கேடும் வாராதே! எவ்விதம் வரும்? சிந்தித்துப் பார்!
அவ்வியனுக்கு ஆக்கமும், செவ்வியனுக்குக் கேடும் ஏன் வந்தது? சிந்தித்துப் பார்!
அவ்வியனுடைய ஆக்கம் செவ்வியனுடைய கேட்டிலும் சிறந்ததா? சிந்தித்துப் பார்!
அவ்வியனுடைய ஆக்கமும் செவ்வியனுடைய கேடும் சமனாக இருக்குமா? சிந்தித்துப் பார்!
அவ்வியனுடைய ஆக்கம் செவ்வியனுடைய கேட்டை விடக் குறைந்ததா? சிந்தித்துப் பார்!
கெட்டவர் செல்வம் பெறுவதும், நல்லவர் வறுமை அடைவதும் ஏன்? பழவினையினால்தானா? சிந்தித்துப் பார்!
கெட்டவர் வறுமையடைவதும், நல்லவர் செல்வம் பெறுவதும்கூடப் பழவினையினால்தானா? சிந்தித்துப் பார்!