உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

துன்பங்களையும் தான் ஒருவனாகவே இருந்து தனித்து இரந்தும் அடைய நேரிடும் என்பதும் இக்குறளின் கருத்து.

ஒருவனுக்கு அவனது முயற்சி கொடுக்கும் செல்வத்தையும், பெற்றோர் தம் மக்களுக்கு வழங்கும் செல்வத்தையும் கண்டு அழுக்காறு கொள்வது தவறு என்பதையும், “கொடுப்ப தழுக்கறுப்பான்” என்ற சொற்றொடரிற் கண்டு மகிழலாம்.

பொறுமையை இழந்து, பொறாமையே கொள்ளும் குணம் படைத்த ஒருவனை, அவனது சுற்றத்தாரும் வெறுத்து ஒதுக்கி விடுவர். அவனைச் சுற்றி எவருமே இரார். ஆதலின் அவனுக்கு “சுற்றம் கெடும்” என நாமும் கூற வேண்டியதுதான்.

உடல் அழுக்கிலும் மன அழுக்கு மிகவும் வெறுக்கத்தக்கது. உடலிற்படும் அழுக்கு உடல் நலத்தைக் கெடுத்து விடுவதுபோல, மனத்திற் படும் அழுக்கு மகிழ்வதற்குரிய வாழ்வையே கெடுத்துவிடும் என்பது இக்குறள் கூறாமற் கூறும் கருத்தாகும்.

அழுக்கற்று வாழும் வாழ்வே உயர்ந்த வாழ்வு. ஆதலின் எவ்விடத்தும், எப்பொழுதும் அழுக்காறு கொள்ளாதே. அது உன்னைத் தீநெறியிற் புகுத்தித் தீயுழி உய்த்துவிடும். அதனால் நீ கெடுவது மட்டுமல்ல, உனது சுற்றமும் கெட்டுவிடும் என்பதே இக்குறளின் முடிந்த முடிவாகும். குறள் வேண்டுமா? படியுங்கள் மறுமுறையும்.

       "கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
        உண்பதூஉம் இன்றிக் கெடும்."