51
தாக்கப்பெற்ற மதயானை ஒன்று அஞ்சி அலறி ஓடுவதைக் கண்டு அகமகிழ்ந்து நகைத்திருப்பானோ? அவ்விதமாயின், இது வெற்றிச் சிரிப்பு ஆகும்.
யானையோடு போரிட்ட களைப்பையும் கருதாது, மாற்றானின் வேலால் உடல் துளைக்கப் பெற்ற களைப்பையும் நினையாது, மீண்டும் போரில் விருப்பங்கொண்டு தன் மெய்யில் அழுந்திய வேலையே பறித்துப் பகைவரை அழைத்துச் சிரித்தானோ? அவ்விதமாயின் அது பயங்கரச் சிரிப்பு ஆகும்.
இச் சிரிப்புகளில் அடங்கியிருக்கிற பொருள்கள் இவ்வளவுதானோ? இன்னும் என்னென்னவோ? யாரால் கண்டு கூறமுடியும்? எத்தனையோ சிரிப்புக்களைக் கண்டு சிரிப்பாய்ச் சிரிக்கின்ற நமக்கு, இவ்வீரனது நகைப்பு ஒரு திகைப்பையே உண்டாக்கிவிடுகிறது.
'மெய்வேல் பறியா நகும்' என்வ நான்கு சொற்களுக்குள்ளாகவே இவ்வளவு கருத்துக்களையும் அடக்கிக் காட்டுகின்ற வள்ளுவரது புலமையும், திறமையும் பாராட்டுதலுக்குரியவையாகும்.
இக்குறளுக்கு உரை கண்ட ஆசிரியர் பரிமேலழகர் தன் கைவேலைக் களிற்றோடு போக்கிய பிறகு, தன்னைக் கொல்லவரும் மற்றொரு யானையைக் கண்டு தன் மெய் வேலைப் பறித்து நகைத்தான் எனக் கூறுகிறார். மற்றொரு யானையை அவர் வருவித்துக் காட்டுகின்ற காட்சி குறளைத் தழுவாவிட்டாலும், வீரத்தைத் தழுவி நிற்பதால் வரவேற்கக்கூடியதே யாகும்.
வேல், அம்பு முதலியவைகளைத் தம் உடம்பில் வாங்கித் திருப்பி எறியும் போர்ச் சிறப்பை,