பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

55

வந்தவை 6, (136, 137, 35, 48, 384, 536.); குற்றம் என்ற பொருளில் வந்தவை 5, (127, 164, 467, 716, 893.); வழுக்கல் என்ற பொருளில் வந்தவை 3, (384, 415, 963.); பிழை என்ற பொருளில் வந்தவை 2, (138, 808); இன்னாமை என்ற பொருளில் வந்தது 1, (911); மறுப்பு என்ற பொருளில் வந்தது 1, (535). இக்குறளில் இது “முதல் வரிசையிலுள்ள தவறு” என்ற பொருளில் வந்துள்ளது.

“இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி” என்ற இக் குறளின் கீழ்ப்பகுதி, ஒழுக்கத்தில் தவறிய மக்கள் பழியை அடைய நேரிடும் என எச்சரித்துக் கொண்டிருக்கிறது.

பழியிலும் கடும்பழி, கொடும்பழி, பெரும்பழி எனப் பலவகையுண்டு. இக்குறள் அவைகளுக்கு மேலாக “எய்தாப்பழி” என ஒரு புதுப்பழியையுங் காட்டுகிறது.

ஒழுக்கம் தவறிய ஒருவனை சுட்டிக்காட்டி, “இவரிடம் நான் நேற்றிரவு நூறு ரூபாய்களைக் கொடுத்து வைத்துத் திண்ணையிற் படுத்திருந்தேன்; காலையில் கேட்டால் தர மறுக்கிறார்” என ஒருவன் பொய்யாகக் கூறினாலும், உலகம் எளிதாக நம்பிவிடுமாம். பணத்தை அவனிடம் கொடுத்துவிடும்படி ஊரார் வற்புறுத்துவார்களாம். அவன் எவ்வளவுதான் உண்மையைச் சொன்னாலும் ஊரார் நம்பவே மாட்டார்களாம். ஆகவே, அவன் ஏற்காத பழியையும் ஏற்க நேரிட்டுவிடுமாம். இக் கருத்துக்கள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு அம்புகளாக்கி, ”எய்தாப் பழி" என்பது நம் உள்ளத்தில் எய்துகொண்டேயிருக்கிறது.

சாலை அமைத்தல், சத்திரங்கள் கட்டுதல், சோறு வழங்குதல், கோயிலைப் புதுப்பித்தல், பள்ளியைத்