உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் புதைபொருள் 2.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

அவருக்கு நன்மை செய்து விடுவது, பிறர் துன்பத்தைத் தன் துன்பமாகக் கருதாதவனுடைய அறிவு பயனற்ற அறிவு. இன்னாது என அறிந்தும் அதை ஒருவன் பிறர்க்குச் செய்வது பெருந்தவறாகும். எப்போதும் யாருக்கும் எந்த அளவிலும் இன்னா செய்யாமையே தலையாய அறம். பிறர் தனக்குச் செய்த இன்னாதனவற்றின் துன்பத்தை அனுபவிக்கும் ஒருவன் அதையே பிறனுக்குச் செய்ய விரும்புவது ஏன்? இன்னாதவற்றை ஒருவன் பிறனுக்கு முன்செய்தால் அது அவனுக்கு பின்னே வந்து சேரும் என்ற கருத்துக்களை ஒன்பது குறள்களாற் கூறிய வள்ளுவர், இறுதிக்குறளாகிய இக்குறளில் “ஒருவன் செய்த நோய் அவனையே வருத்து மாதவின், நோயில்லாமல் வாழ விரும்புகிறவர்கள், பிறருக்கு நோய் செய்யமாட்டார்கள்” என்று அறுதியிட்டுக் கூறுகிறார்.

“நிலத்தில் அறைந்தவன் கை வலியெடுக்கத் தப்பாதது போலப் பிறருக்குத் துன்பஞ்செய்தவன் அத்துன்பத்திலிருந்து தப்ப முடியாது” என முன்னொரு குறளிற் கூறியிருந்தார். அக்குறளிலிருந்து அறையப்பெற்ற நிலத்திற்கு சிறிது அதிர்ச்சியும், அறைந்தவனது கைக்குப் பெருவலியும் உண்டாகும் என அறிந்தோம் என்றாலும் அதனதன் பங்கு எவ்வளவு இருக்கும்?" என்று ஐயுறுவாரை நோக்கியே, இக்குறள் கூறப்பெற்றிருப்பதாகத் தோன்றுகிறது.

ஒருவன் பிறருக்கு இன்னா செய்தால், செய்தவனுக்கு 99 பங்கு துன்பமும், செய்யப் பெற்றவனுக்கு ஒரு பங்கு துன்பமும் கூட இல்லை. 100 பங்கு துன்பமும் செய்தவனுக்கேயாம் என்று இக்குறள் கூறுகிறது. இவ்வுண்மையை இக்குறளிலுள்ள “நோய் எல்லாம்” என்ற இரு சொற்களிற் கண்டு மகிழுங்கள்.