பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

12. பொறையுடைமை

பொறையுடைமையாவது தமக்குத் துன்பஞ் செய்தாரைத் தாமுந் துன்பஞ் செய்யாது அவர் மாட்டுச் சென்ற வெகுளியை மீட்டல்.

மேல் காமத்தால் வரும் குற்றங் கூறினர், இது வெகுளியால் வரும் குற்றம் கூறுகின்றதாகலின் அதன்பிற் கூறப்பட்டது.

151. பொறுத்த லிறப்பினை யென்று மதனை

மறத்த லதனினு நன்று.

(இ-ள்) பிறர் செய்த மிகையினை யென்றும் பொறுத்தல் நன்று; அதனை மறத்தல் பொறையினும் நன்று, (எ-று).

மறத்தல்- வெகுளாமை; அதுமிகுதியுடைத் தாதலாற் றுற வறத்திற் கூறினர். இது பொறையுடைமை வேண்டும் என்றது, 1

152. திறனல்ல தற் பிறர் செய்யினு நோய்நொத்

தறனல்ல செய்யாமை நன்று.

(இ-ள்) தகுதி யல்லாதனவற்றைத் தனக்குப் பிறர் செய்தார் களாயினும், அவற்றைத் தானுஞ் செய்தால் அவர்க்கு உளதாம் நோவுக்கு நொந்து அறனல்லாதவற்றைச் செய்யாமை நன்று. (எ-று).

இஃது அறத்தைநோக்கிப் பொறுக்க வேண்டுமென்றது. 2.

153. நிறையுடைமை நீங்காமை வேண்டிற் பொறையுடைமை

போற்றி யொழுகப் படும்.

(இ-ள்) தனக்கு நிறையுடைமை நீங்காதொழிய வேண்டு வயிைன். பொறையுடைமைப் பாதுகாத்தொழுகவேண்டும்; (எ-று).

நிறையென்பது காப்பன காத்துக் கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம், இது நிறைவேண்டுவார் பொறுக்கவேண்டுமென்றது. 3.

1. ‘நோய்நொந்’ என்பது மனக்குடவர் பாடம்