பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை


குள்ள சிலசில நச்சுக் கருத்துகளை நீக்கிவிட்டால், அவ்வுரையே போதும்; நூல் முழுமைக்கும் புத்துரை எழுதத் தேவையில்லை என்றும், மொழி ஞாயிறு பாவாணர் அவர்களின் உரை (தமிழ் மரபுரை) வெளிவந்தபோது பாவாணரின் தமிழ் மரபுரையே நிறைவானது; வேறு எவரும் திருக்குறளுக்கு உரைஎழுதத் தேவையில்லை, என்றும் கருத்துத் தெரிவித்த பாவலரேறு அவர்கள், உள்நாட்டுப் பாதுகாப்பு என்னும் கொடிய அடக்குமுறைக் கடுஞ்சட்டத்தின்கீழ்(MISA)ச்சிறைப்படுத்தப்பட்டிருந்தபோது, உடனிருந்த சிறையாளிகளின் வேண்டுகோட்கிணங்கி, அங்கு, வகுப்பு நடத்தும் பொருட்டுத் திருக்குறளை துணுகி நோக்க முற்பட்டு, அதன் கருத்தாழத்தையும் பிற சிறப்பு நலங்களையும் கண்டு வியந்து, இதுகாறும் வெளிவந்த எவ்வுரையானும் பொந்திகையுறாத மனநிலைக்கு ஆளாகித் திருக்குறளுக்குத் தாமே ஒரு புத்துரை காணவும், அதன்வழித் தாங்கண்ட மெய்ப்பொருளை விரித்து விளக்கிக் காட்டவும் வேண்டும் என்று உள்ளங்கொண்டு முனைந்தார்கள்.

தொடர்ந்து கோனேரிப்பட்டி, அணைப்பட்டி, பவானி என்னும் இடங்களில் திருக்குறள் தொடர்பாக நடைபெற்ற கட்டூர்(Camp)நிகழ்ச்சிகளும் பிறவும் உரைகாணும் முயற்சிக்கு உரஞ்சேர்த்தன.

அடுத்து ஒடுக்குமுறைக் கொடுஞ்சட்டத்தின்கீழ் (TADA)ஐயா அவர்கள் சிறைப்படுத்தப்பட்டிருந்த காலத்தில் உரையெழுதும் பணி தொடர்ந்தது; மேலும் தொடரமுடியாத நிலைக்கும் அச் சிறைவாழ்வு அடிகோலியது.

பாவலரேறு அவர்கள் தம் வாழ்நாளில் இம் மெய்ப்பொருளுரைக்காக மேற்கொண்ட முயற்சியைப் போல் வேறு எதன் பொருட்டும், எந்நூலுக்கும் எடுத்துக்கொண்டதில்லை. இதனைத் தம் வாழ்நாட் பெரும்பணியாகவே கொண்டிருந்தார்கள். அவர்கள் இதற்காகச் செலவிட்ட நேரத்தில் நூறாசிரியமும், பாவியக்கொத்தும், ஐயையும் போல் எத்தனையோ இலக்கியங்களைப் படைத்திருக்கலாம்; கணிச்சாறும் பள்ளிப் பறவைகளும் போலும் பலப்பல பாடற்றொகுதிகளை வெளியிட்டிருக்கலாம். கற்பனை யூற்றுகளைப் பெருக்கியிருக்கலாம். உரைநடை ஆக்கங்களின் எண்ணிக்கையை உயர்த்தியிருக்கலாம்.

ஆனால், திருக்குறளின் அரும்பெருஞ் சிறப்புகளை ஆய்ந்துகண்டு அதிலேயே தோய்ந்துவிட்ட அவரது உள்ளம், பொய்யாமொழியின் மெய்ந் நெறியே தமிழினத்தை உய்விக்கும் தக்க பெருவழி என உறுதியாகக் கொண்டமையால் அதன் மெய்ப்பொருளுரை ஆக்கத்திலேயே இறுதிவரை முயன்றார்கள். அவர்கள்தம் இறுதிக் காலத்து உரைப் பொழிவுகளிலும் உரையாடல்களிலும் திருக்குறளும் மெய்ப்பொரு