பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார்
ளுரையுமே மேலோங்கி நின்றன.

இனி, வந்தேறிகளான ஆரியச் சிற்றினத்தவரால், செந்தமிழ் மக்களின் பண்பட்ட வாழ்வியல் நிலைகள் பாழ்படத் தொடங்கிய நிலையில், அவ்விழிநிலையைத் தடுத்து நிறுத்தித் தமிழினத்தை உய்விக்கவே வாழ்வியல் நூலான திருக்குறளைத் திருவள்ளுவர் படைத்தார் என்னுங் கருத்தை இவ்வுரையின் முன்னுரையுள் பாவலரேறு ஐயா அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

திருவள்ளுவப் பெருந்தகை, அற்றைக் கழகப் புலவர்கள் போல் அரசர்களை நாடியும் பாடியும் பரிசில் வாழ்க்கை மேற்கொள்ளாமல் தன்மானத்துடன் வாழ்ந்து, மக்களுக்கான பொதுநிலையறம் உணர்த்தியுள்ள சிறப்பைப் பெரிதும் பாராட்டியிருப்பது, திருவள்ளுவரின் பெருமையை மட்டுமன்றிப் பாவலரேற்றின் பெருமித உள்ளத்தையும் புலப்படுத்துகின்றது.

திருக்குறளுக்கு உரைவகுத்த முற்கால பிற்கால உரையாசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களுமான பலர் வெளிப்படுத்தியுள்ள பொருந்தாக் கருத்துகளைச் சுட்டிக் காட்டிக் கண்டித்திருப்பதுடன், பாவலரேறு அவர்கள் அவற்றுக்குத் தாங்கண்ட மெய்ப்பொருளையும் தெளிவுபடுத்தியுள்ளார். அன்றியும் ஆரிய நச்சுக் கருத்துகள் இவை அருந்தமிழ் நற்கருத்துகள் இவையென வேறுபடுத்தி விளக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பெண்பாலார்க்கு மட்டுமே கற்பை வலியுறுத்தி ஆண்பாலார்க்கு அதனை வலியுறுத்தாதது மட்டுமன்றி, அவர்தம் பரத்தமை வாழ்வையேகூடப் பாராட்டிப் பாடும் முன்னை நிலைக்கு மாறாக, ஆண்பாலார்க்கும் திருவள்ளுவர் கற்பு நிலையை வலியுறுத்துகிறார் என்பதினை

ஒருமை மகளிரே போலப் பெருமையுந்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு

என்னுங் குறட்பாவின்வழிப் புலப்படுத்தியிருப்பதோடு, அதனை அறத்துப்பால்-இல்லறவியலில் எடுத்துரையாது, பொருட்பால்குடியியலில் கூறியதேன் என்பார்க்கு, உரையாசிரியர் பாவலரேறு தரும் விளக்கம் இம்மெய்ப்பொருளுரையின் சிறப்புக்கு ஒர் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.

உரனென்னுந் தோட்டி, வரனென்னும் வைப்பு, வழியடைக்குங்கல், இயல்புடைய மூவர், எழுபிறப்பு என்பனவும் இன்ன பிறவுமான பலப்பல தொடர்கள் இம்மெய்ப்பொருளுரையில் புதுப்புது விளக்கங்