பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௧௰

முன்னுரை


களைப் பெற்றுள்ளன.

கடின சந்திகள் பிரிக்கப்பட்ட நிலையில் மூலமும், பொருள்கோள் முறையமைப்பும், பொழிப்புரையும், சில விளக்கக்குறிப்புகளும் என அமைந்துள்ள மெய்ப்பொருளுரையில் நூற்றுக்கணக்கான நூல்களினின்றும் மேற்கோள்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன; தருக்கமுறையில் கருத்துகளை வலிவூட்டி நிற்கின்றன.

இனி, மனு முதலிய வடமொழி நூல்களின் தமிழ் மொழி பெயர்ப்பு எழுத்துஞ் சொல்லும் ஆகிய இருவகை நிலையிலும் கலவை நடையிலேயே இருந்தமையால், இவ்வுரையின்கண் மேற்கோளாக எடுத்தாளப் பெற்றுள்ள அந்நூற்பகுதிகள் அவற்றில் உள்ளவாறே ஈண்டு இடம்பெற்றுள்ளன. உரை மேன்மேலும் விரிவுபட்டுக்கொண்டே சென்றமையால், உரையாசிரியர் அம் மொழிபெயர்ப்பைத் தமிழ்ப்படுத்துவதில் நாட்டஞ் செலுத்த வாய்ப்பில்லாமல் போய்விட்டது. இப்போது அவற்றைத் தமிழ்ப் படுத்திப் பதிப்பிக்கலாம் எனினும் ஐயா அவர்கள் புகழுடல் எய்திவிட்ட நிலையில் இந்நூல் வெளிவருதலால் அவ்வாறு செய்ய விரும்பவில்லை.

இம் மெய்ப்பொருளுரை தொடர்ந்து நடந்து முற்றிய பின், இதன் மீதெழும் ஐயங்களைக் களைந்தும், விடுபாடுகளை விளக்கி நிறைத்தும், இன்னும் பல அரிய செய்திகளைக் கூட்டியும் நிறைவுரை யொன்று எழுதவும் எண்ணியிருந்தார்கள். ஆனால் அதற்கு வாய்ப்பில்லாமலே போய்விட்டது. பாயிரவியலும், இல்லறவியலும் எனும் ஈரியல்களிலுமுள்ள இருபத்து நான்கு அதிகாரங்களுக்கான உரையே நிறைவெய்தியுள்ளது.

இம் மெய்ப்பொருளுரை முதற்பகுதியில் 'உரையெழுத விழைந்த நோக்கமுஞ் சூழலும் உருவாக்கத் திட்டமும்' என்பது முதலான எழுபெருந் தலைப்புகளில், ஐயா அவர்கள் வரைந்துள்ள விரிவான முன்னுரையும், இனியவை கூறல் ஈறான முதற் பத்து அதிகாரங்களுக்குரிய உரையுமே இடம்பெற்றுள்ளன.

செய்ந்நன்றியறிதல் முதலான ஏனைப் பதினான்கு அதிகாரங்களுக்கான உரை, இப் பேருரைக்கென ஐயா அவர்களால் தொகுக்கப் பெற்ற பன்னூறு குறிப்புகளையும் பின்னிணைப்பாகக் கொண்டு வெளிவரும்.

திருக்குறள் வரலாற்றில் ஒரு திருப்புமுனை முயற்சியான இம் மெய்ப்பொருளுரையைத் தமிழ்க்கூறு நல்லுலகம் தக்கவாறு, பயன்கொள்ளுமென நம்புகிறோம்.

O