பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/131

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௧௨௮ 

முன்னுரை 


கடவுளால் படைக்கப் பெற்ற மக்கள் நான்கு வகையினர். அவர்கள் பிர்மாவின் முகத்தில் பிறந்த பிராமணர்கள், அவன் தோளில் பிறந்த சத்திரியர்கள், தொடையில் பிறந்த வைசியர்கள், பாதத்தில் பிறந்த சூத்திரர்கள்.

இவையே வர்ணப் பிரிவுகள். இப்படைப்பு நிலை நான்கு வேதங்களிலும் முதலாவதான ரிக்வேதத்திலேயே சொல்லப்பட்டிருக்கிறது.

'ப்ராஹ்ம ணோஸ்ய முகமாஸீத்
 பாஹல் ராஜன்ய க்ருத:
 ஊரூத தஸ்ய யத்வைஸ்ய
 பத்வியாக்ம் ஸூத்ரோ அஜாயத:

- ரிக் வேதம் 8-ஆம் கட்டளை. புருஷ ஸூக்தம்.

இதே கருத்துத்தான் மனுவிலும் சொல்லப்பெற்றிருக்கிறது.

'உலக விருத்தியின் பொருட்டு (பிர்மாவானவர்) தன்னுடைய முகம், தோள், தொடைகால் (பாதம்) - இவற்றினின்றும் பிராமணன், சத்திரியன், வைஸியன், ஸூத்ரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்.

- மனு: 1.31.

இம் 'மனுதர்ம' நூலை மனு அல்லது மநு என்னும் பெயருடைய ஓர் அரசன் எழுதியதாக ஆரிய நூல்கள் கூறுகின்றன. ஆனால் அதே பொழுது, மனு என்னும் பெயரில் பதினான்கு பேர்கள் இருந்தனர் என்றும், அவற்றுள் கூறப்பெற்றுள்ளது. அவருள் மனுதர்மத்தை எழுதிய மனு என்பான் திருவள்ளுவர் காலத்திற்கு முன்னோ பின்னோ வாழ்ந்ததாகவும் அறிஞர் பலர் கூறுகின்றனர். மனு என்பான் சோழ மரபில் வந்த முன்னோன் என்றும் ஒரு குறிப்பு உள்ளது. அதனால் மனுதர்மம் எழுதியவன் ஒரு தமிழவரசன் என்றும் கூறுகின்றனர். இவ்வகையில் கூறப்பெறும் கூற்றுகள். யாவும், வரலாற்றடிப்படையாகவன்றிப் புராண நூல்கள் முதலியவற்றையே அடிப்படையாகக் கொண்டு கூறப் பெற்றுள்ளன வாகையால், இவற்றுள் எதனையும் உறுதியாகத் தீர்மானிக்க வியலாமல் உள்ளது.

மேலும் மனுதர்மம் எழுதிய மனு என்பான், கி. மு. 20 முதல் கி.பி. 200க்குள் வாழ்ந்திருக்கவேண்டுமென்று அறிஞர் சிலர் கருதுகின்றனர். சிலர், திருவள்ளுவர்க்கு நான்கு நூற்றாண்டுகள் முன்பு என்றும், கி.பி. 3ஆம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்தவர் என்றும் பலபடக் கூறுவர். எப்படியோ, அவர் அக்காலத்து வழங்கிய ஆரிய வேதமதக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டே மனு அத் தரும நூலை எழுதியிருப்பதாக அதிலேயே கூறியிருப்பதாலும், வேதங்களுக்கே அந்நூலுள் உயர்வு கற்பிக்கப்