பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௨௯


பெற்றிருப்பதாலும் அவ்வகைக் கருத்துகள், திருவள்ளுவர் காலத் தமிழகத்தில் பரவிக்கொண்டிருந்திருக்க வேண்டும் என்றும், அக்கருத்துகளை மறுத்துரைக்கவும், அவற்றுக்கு எதிரான தமிழியல் கருத்துகளை நிலைப்படுத்தவுமே அவர் திருக்குறளை எழுதியிருத்தல் வேண்டும் என்றும் உறுதியாகக் கருத இடமுண்டு. அதற்கு அகச் சான்றுகளாகப் பல கருத்துகளும் இந்நூலுள் கூறப்பெற்றிருப்பதையும் காணலாம்.

ஆனால், இதற்கு நேர் எதிரான கருத்தாக, திருக்குறளை, முழுமையும் ஆரியச்சார்பான கருத்துகளைக் கொண்டிருப்பதாக முதன் முதல் வலிந்து காட்டியவர் பரிமேலழகரே என்க. அவர்தம் திருக்குறள் உரையின் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது. அவ்வுரை வருமாறு:

"அவற்றுள் அறமாவது, மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழித்தலும் ஆம் அஃது ஒழுக்கம், வழக்கு தண்டம் என மூவகைப்படும்.

அவற்றுள் ஒழுக்கமாவது. அந்தணர் (ஆரியப் பார்ப்பனர்) முதலிய வருணத்தார், தத்தமக்கு விதிக்கப்பட்ட, பிரமசரியம் முதலிய நிலைகளில் நின்று, அவ்வவற்றிற்கு ஓதிய அறங்களின் வழுவாது ஒழுகுதல்.

வழக்காவது, ஒரு பொருளைத் தனித்தனியே 'எனது எனது' என்று இருப்பார், அது காரணமாகத் தம்முள் மாறுபட்டு, அப்பொருள்மேல் செல்வது. அது, 'கடன் கோடல்' முதல் பதினெட்டுப் பதத்தது ஆம்.

தண்டமாவது. அவ்வொழுக்க நெறியினும் வழக்கு நெறியினும் வழீஇயனாரை, அந்நெறி நிறுத்துதற் பொருட்டு ஒப்ப நாடி அதற்குத் தக ஒறுத்தல்.

"இவற்றுள் வழக்கும் தண்டமும் உலகநெறி நிறுத்துதற் பயத்தலாவது அல்லது, ஒழுக்கம் போல் உயிர்க்கு உறுதி பயத்தல் சிறப்பில ஆகலானும், அவைதாம் நூலாலே அன்றி உணர்வு மிகுதியானும் தேய இயற்கையானும் அறியப்படுதலானும், அவற்றை ஒழித்து, ஈண்டுத் தெய்வப் புலமைத் திருவள்ளுவரால் சிறப்புடைய ஒழுக்கமே அறம் என எடுத்துக் கொள்ளப்பட்டது.”

-இவ்வாறு, திருவள்ளுவர் கூறிய அறம், ஆரியவியலாரால் வகுத்துக் கூறப்பெற்ற வருணவொழுக்கமே ஆகும் என்று பரிமேலழகரால் திசை மாற்றிக் கூறப்பெறுகிறது.

இனி, ஆரியவியல் கோட்பாடுகள், தமிழியலுக்கு எவ்வெவ்வகையுள் மாறுபட்டனவாக உள்ளன என்பதை ஆரிய நெறி நூலான அம் மனுதர்மத்தைக் கொண்டே உறுதிப்படுத்துவோம். மனுதர்ம நூலுள் வேதத்திற்கும் ஆரிய வர்ணாச்ரம நெறிக்கும் உயர்வு கற்பித்துள்ளதைக்