பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௧௪௨

முன்னுரை 


கொன்றாகும் ஆக்கம் கடை' - 328

-இவை போலும் கருத்துகள் தமிழியல் சார்ந்தவை. இவை ஆரியவியலுக்கு நேர் எதிரானவை என்பதறிக.

இனி, ஆரியவியலில் எங்கு நோக்கினும் எவ்விடத்தும் பிராமணர்க்கே ஏற்றம் கூறப்பெற்றதே காணப் பெறுகிறது. அவர்களின் வாழ்வியல், அறவியல், அரசியல், சட்டம், தண்டனை, குமுக அமைப்பு, உடைமைகள், பெண்ணியல் முதலிய அனைத்து நிலைகளிலும் ஆரியவியல் கோட்பாடுகளுக்கும், தமிழியல் கோட்பாடுகளுக்கும் பலவாறான வேற்றுமைகளே காணப் பெறுகின்றன. அவ்வேறுபாடுகளை இங்குச் சிற்சில கூறுகளில் ஒரு சிறிது எடுத்துக் காட்டுவோம்.

வாழ்வியலைப் பொறுத்த வகையில் ஆரியவியலின் வகுமுறைகளைப் பாருங்கள்.

'சூத்திரர்களின் தருமம் என்னவென்றால் பிராமணர்களுக்குப் பணிவிடை செய்வதும், அவர்களுக்கு அடிமையாய் இருப்பதுமே. மோட்சத்திற்கு அதுவே ஏதுவாகும் - என்று கருதி இத்தருமத்தை விதித்தார். அதுவும் அருவருப்படையாமல் செய்யவேண்டும்'

- மனு: 1 - 31.

பிராமணர்களின் வாழ்விடம்:

'தேவர்கள், பெரியோர்கள் என்பவர்கள் வாழுமிடம் சரஸ்வதி, திருஷத்துவதி என்னும் நதிகள் ஒடும் மத்திய பிரதேசமே! அதுவே பிர்ம்மா வர்த்தம். அங்குள்ள பிராமணர்களே தருமங்களைச் சொல்லத்தக்கவர்கள் மத்திய பிரதேசம் என்பது இமயமலைக்கும் விந்தியமலைக்கு இடையில் உள்ள பிரதேசமே! அதுவே ஆரியா வர்த்தம்'

- மனு: 2 - 17 முதல் 22 வரை

. 'பிராமணர்கள் வேறு தேசத்திற் பிறந்தவர்களாயினும் அவர்கள் ஆரியா வர்த்தமான மத்திய பிரதேசத்திற்குத்தான் வந்து வாழ வேண்டும். அத்துடன் சூத்திரன் தன் ஊழியத் தொழிலைவிட (அஃதாவது பிராமணர்க்கு அடிமை செய்வதைவிட) வேறு உயர்ந்த வேலைகளை எந்த இடத்தில் செய்யவில்லையோ அந்த இடமே பிராமணர்கள் வசிக்கத் தகுந்த இடம்'

- மனு: 2 - 24

'பிராமணனுக்கு உயர்ந்த பெயரையும், சூத்திரனுக்குத் தாழ்வையும் இழிவையும் காட்டுகிற பெயரையுமே இடுதல் வேண்டும். பிராமணன் சர்மா என்பதையும், ௯த்திரியன் வர்மா என்பதையும், வைசியன் பூதி(பூபதி) என்பதையும், சூத்திரன் தாசன் என்பதையும் தொடர் பெயராக வைக்க வேண்டும்'

- மனு: 2 - 31, 32.