பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௧௭௭


புத்திரன் (புதல்வன்) என்று பெயர்.’

‘மனைவியர் பலருள் ஒருத்திக்கு மகன் பிறந்தால் பல மனைவியர்க்குமே சந்ததி வாய்த்தது எனக் கொள்ள வேண்டும்.’

‘பல மனைவியர் வழக்கம் தொடக்கக் காலத்திலிருந்தே உண்டு. மனித குல முதல்வரில் ஒருவனான அந்தகன் என்பான் ஏராளமான பெண்களைப் பெற்றான். அவர்களுள் சந்திரனுக்கு 27பெண்களையும், காசியபருக்கு 13 பெண்களையும், எமதர்மனுக்கு 10 பெண்களையும் மணம் செய்து கொடுத்தான்.’

‘புத்திரன் பிறந்தால் ஒருவன் சொர்க்கமும், பேரன் பிறந்தால் சொர்க்கத்தில் நிலைபேறும், புத்திரனுக்குப் பேரன் பிறந்தால் சூரிய லோகமும் பெறுகிறான்.’

‘மூத்த பிள்ளை மட்டுமே தர்மத்தால் பிறக்கிறான். மற்றோர் காமத்தால் விளைந்தவர்களே.’

- இவ்வாறு, பெண்களைப் பற்றிப் பற்பல கோணங்களில் வரும் ஆரியவியல் கருத்துகளுக்கு நேர் எதிரான கருத்துகளே திருக்குறளில் கூறப்பெறுகின்றன. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு, இக்காலப் பெண்ணியல் ஆய்வாளர்களும், அரைகுறை அறிஞர்கள் ஒரு சிலரும், திருக்குறளிலும் ஆணாளுமை (ஆணாதிக்கம்) உள்ளது என்றும், பெண்களைப் பற்றி இழிவாகவும், தாழ்வாகவும் கூறப்பெற்றுள்ளது என்றும் தவறாகவும் தாறுமாறாகவும் எழுதுவதும் பேசுவதும் மிகவும் அறியாமையும், திருக்குறளைச் செரியாமையும், ஆரியவியலைப் புரியாமையும் ஆகும் என்க:

இனி, திருக்குறளில் கூறப்பெறும் பெண்ணியல் கருத்துகளில் ஒரு சிலவற்றை இங்கு ஒப்பிட்டுக் காணுவது அனைவரின் தெளிவுக்கும் உகந்ததாகும்.

'திருக்குறளில் பெண்மை உயர்வாகவும் உண்மையாகவும் பெருமையாகவும் பேசப்பெறுகிறதே யொழிய எங்கும் எவ்விடத்திலும், ஆரியவியல் போல் இழிவாகவும், தாழ்வாகவும், பொய்யாகவும் பேசப் பெறவில்லை என்பதைக் கீழ்வரும் எடுத்துக் காட்டுகளால் உணர்க. இவற்றின் விரிவான விளக்கங்களை நூலுள் வரும் அவ்வக் குறட்பாவின் உரைகளாலும் கண்டு தெளிக’

‘முதற்கண் ஆரியவியலில் கூறப்பெறும் எண்வகைத் திருமணப் பிரிவுகள் திருக்குறளிலோ வேறு தமிழியல் நூல்களிலோ ஏற்கப்பெறவில்லை.’

ஆரியவியலில் கூறப்பெறும் எண்வகைத் திருமண முறைகளாவன: