பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௧௮

முன்னுரை 


தோற்றப்பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட தமிழிலக்கியங்களில், திருக்குறளில் பதிந்துள்ள கருத்துக்களிற் பல பரவலாகப் பயன்படுத்தப் பெற்றுள்ளன! ஆயினும், இஃது இற்றைக்குத் தெரிவுறும் பெருநிலையில் அது தோற்றங்கொண்ட காலத்தினின்று இத்தகைய பரவலுற்ற பெருமதிப்பைப் பெற்றிருக்கவில்லை! தொடர்ந்த சிதைவுகளை நம் இனமும் மொழியும் பெற்றவாறே யிருந்தன! எழுச்சியும் உணர்ச்சியும் விழிச்சியுமற்று வீழ்ச்சியிலேயே சரிந்து சாய்ந்து கொண்டிருந்த தொடர்வரலாற்றையே நம்மினம் பதிவு செய்து கொண்டிருந்தது! இன்னும் எழவேயில்லை! . . . . .

எக் காரணத்திற்கெனத் திருவள்ளுவர்பெருமான் இந்நூலை யாத்தளித்தனரோ - அதற்குரிய கரு பற்றிய சிந்தனையோட்டமே நம் மக்களின் நெஞ்சப்பையுள் முறையுற இன்னும் பாயவில்லை; படியவில்லை! முறைப்படப் படியாமையாலும் - அனைவர்க்கும் தெளிவுறுத்தத் தக்கவகையில் உரிய திறம்பெற அவை இன்னும் விளக்கப்படாமையாலும் விளங்கிய சிலவரும் முற்றக் கடைப் பிடியாதிருந்தமையாலும் இந்நூலும் அப்படியே இருந்தபடியே இருந்து கொண்டிருந்தது! அல்லவை தேயாவாயிருக்கையில் எப்படி அறம் பெருகும்? அல்லவை தேய வேண்டுமானால், நல்லவை நல்லோரால் நன்கு ஆராய்ந்துணரப்பெற்று அவை இனிய வகைமுறையில் மக்களிடம் பரப்பப்பெற வேண்டுமே! நல்லோர் சிலவர் உணர்ந்தறிகின்றனரெனினும் அவர் மக்கட் பற்றும் பொதுத்தொண்டுணர்வும் மக்கட்பண்பும் வாயாதவராகவே பெரும்பாலரும் உள்ளனராதலால் - இம் மண்ணில் உரிய வினை விதைகள் வித்தப்பெறவில்லை! எனவே, விளைவுகளுமில!

இதுகாறும், திருக்குறளைக் குறித்து எண்ணிக்கையில் ஆயிரத்தை எட்டும்படி, நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் இருபது விழுக்காட்டளவுக்குக் குறளுக்குப் பொருளுரைக்க வந்த உரைநூல்களே உள! திரும்பத் திரும்ப அச்சுத்தேரில் அவை ஊர்ந்து ஊர்ந்து ஆயிரமாயிரமாய் உருப்படிகளாகின்றன! ஆங்காங்கும் பரப்பவும் பெறுகின்றன! இரண்டு நூற்றாண்டுகளாய் இந்நிலை தொடர்கின்றது!

கடைக்கழகக் காலத்திற்குப் பிறகு நெடும்படுக்கையில் நெடுகலுங்கிடந்த நெற்றிலக்கிய முற்றிலக்கண நூல்களையெல்லாம் மீண்டும் பயில வேண்டும் என்றவாறு பரவலாகிய ஓர் உந்தெழுச்சி கி.பி. பத்தாம் நூற்றாண்டளவில் முளைவிட்டுத் தளிர்கொண்டது!