பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/206

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௨௦௨

முன்னுரை 


ஆனாளுமைக் கருத்துகளை மட்டும் ஆய்வோம்.

இதில், 'பிறன் பொருளாள்' (141), 'பிறற்குரியாள்' (149), 'பிறன் வரையாள்' (150) என்னும் மூன்று சொல்லாட்சிகளும், பெண்ணை ஒருவனுக்கு உரிய பொருளாக மதிப்பிட்டுச் சொல்வது, அவளை அஃறிணைப் பொருளாகக் சொல்லப்படுவது என்பது சிலர் கருத்தாகும். அவ்வாறு அவர்கள் கருதுவதற்கு இவற்றுள் வரும் 'பொருள்', 'வரையாள்' என்னும் சொற்களே காரணம் என்பர்.

'பொருள்' என்னும் சொல், அஃறிணைப் பொருளாகிய, (thing என்று சொல்லப்பெறும் பணம், பொன், நகை முதலிய செல்வ உடைமைகளை மட்டுமே குறிப்பதாகாது. அது உரிமைப் பொருளில் உயர்திணைகளையும் குறிப்பதாகும் என்பதை உணர்தல் வேண்டும்.

தம்பொருள் என்பதம் மக்கள் - (63)
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் (751)

- ஆகிய இடங்களில் இச்சொல் உயர்திணையாகிய மக்களையும குறித்ததை உய்த்துணர்க. பொருள் என்பது உயிரல் உடைமைப் பருப் பொருள்களையும் குறிப்பது போலவே, உரிமை, உடைமை கருதி அஃது உயிருள்ளவர்களையும் குறித்ததாகும்.

இங்கும், மனைவி கணவனின் உரிமைக்கும் உடைமைக்கும் இலக்காகிறாள். ஒருவனுடைய மனைவி என்று கூறும் இடத்து அவள் அவனுடைய உடைமைப் பொருளாகும் 'உடைய' என்னும் சொல் வருவதைக் காண்க 'உடையவள்' என்னும் ஒரு சொல் மனைவியைக் குறிக்கும் ஒரு சொல்லும் ஆகும் என்க.

ஒருவன் எத்தனைப் பொருள் உடைமைகளைக் கொண்டிருந்தாலும், அவள் மனைவியே அவனுக்குப் பொருள் பொதிந்த முழு உடைமையாவாள். இவ்வுரிமை உணர்வாலும், உடைமை நிலையாலுமே, இங்குப் பிறன் பொருள் பிறற்கு 'உரியாள்' என்னும் சொல் தொடர்கள் ஆளப்பெற்றன. மற்று, அவளை ஓர் அஃறிணைப் பொருளாகக் கருதிக் கூறினாள் என்று எண்ணவே இடமில்லை,

பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற - 61

- என்னும் குறளுள், உயிருள்ள மக்களை, ஒருவன் அல்லது ஒருத்தி பெற வேண்டிய பேறுகளில், பேற்றுப் பொருள்களில் ஒன்றாகக் கருதுவதும் இதுபோலவே என்க.