பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௦௩



இனி, 'பிறன் வரையாள்', 'பிறன் மணந்து கொண்டவள்' என்பதிலும் எந்தத் தாழ்வும் இழிவும் இல்லை. வரைதல் - மணத்தல், எல்லைப்படுதல் என்று பொருள் தரும்.

எனவே, மேற்கூறிய சொற்களுள் ஆனாளுமையோ பெண்ணடிமை யுணர்வோ உள்ளன என்பதற்கு இடமேயில்லை என்று உறுதி கொள்க

அடுத்து, 'பெண்வழிச் சேறல்', 'வரைவின் மகளிர்' என்ற பெண்ணியல்பாடுகளைக் குறிக்கும் இரண்டு அதிகாரங்களும் பொருட்டாலில், 'நட்பியலில்' வருவனவாம். இவ்விரு அதிகாரங்களுக்கும் ஓர் அடிப்படை உண்மை உண்டு. நட்புணர்வில் நண்பர்கள் மட்டுமே அன்றி, மனைவியும், விலைமகளும் அடங்குவர். மனைவி மணவுரிமை பெற்றாலும், அவள் கணவனுக்கு ஒரு நல்ல நண்பியே. மனைவிக்கும் அவள் கணவன் நல்ல நண்பனே. உடலுறவாலும், உடைமை உரிமையாலும், மக்கள் பேற்றாலும் சில கடமை உணர்வாலுமே அவர்கள் கணவன், மனைவி என்று அழைக்கப் பெறுகின்றனர். மற்ற பிற பொது நடைமுறைகளாலும், பழக்க முறைகளாலும் சில குடும்பச் செயல்களாலும் அவர்கள் நல்ல நண்பர்களே.

இதுபோல்தான், கணவன் சிற்சிலகால் தொடர்பு கொள்ளும் விலைமகள் ஒருத்தியும். அவள் தொடர்பும் தீய நண்பர் சிலரால் அல்லது அவளிடம் நேரிடையாகக் கொண்ட பழக்கத்தால் ஏற்படுவதே ஆகும்.

இது பற்றியெல்லாம் உரையுள் விரிவாகப் பேசப்பெறும்.

இங்கு, இவ்விரண்டு அதிகாரங்களிலும், ஆனாளுமையும் அல்லது பெண்ணடிமையுணர்வும் உள்ளனவாகக் கூறப்பெறும் கருத்துகளை மட்டுமே ஆய்வோம்.

'பெண் வழிச் சேறல்' என்னும் அதிகாரத்தின் பொருள், 'பெண்மைச் சுவை கொண்டு, மிகு காம உணர்வில் தன் மனைவியிடம் அளவுக்கு அதிகமான உடலுறவு நோக்கத்துடன் தன் கடமையுணர்வுகளில் வழுவியும், அவளை நிறைவு செய்ய, அவளுக்கு அடிமைச் செயலால் ஒழுகுதலும் கூடாது' என்பதேயாகும். சுருங்கச் சொல்வதனால், 'தன் மனைவியிடம் கழிகாம உணர்வுடன், அவளை ஒரு நுகர்ச்சிப் பொருளாகக் கருதித் தன்மானமும், தன் ஆளுமை மானமும் இழந்துவிடக் கூடாது' என்பதேயாம்.

இத் தலைப்புப் பொருளிலேயே, பெண்ணிழிவும், பெண்ணியற் கொடுமையும், அவளை ஒரு நுகர்ச்சிப் பொருளாக மட்டும் கருதி விடக் கூடாது என்னும் உரிமை மீட்சிக் கருத்தும் புலப்பட வில்லையா? இது சார்ந்த உடலியல், பாலியல், உணர்வியல் கூறுகளெல்லாம் நூலுரையில் நன்கு விரிவாக விளக்கப் பெறுமாயினும், இங்கு இவ்வதிகாரமும், அதிகாரக்-