பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/218

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௨௧௪

முன்னுரை இவரின் இத்தகு தகாவுரைகள் பற்றி அடுத்துவரும் தலைப்பின் கண் விரிவாகக் கூறுவோம். இதில், நூல் அமைப்பு, நூற் பாகுபாட்டின் கீழ் அடங்கும் பால், இயல், அதிகாரப்பிரிவுகள், பெயர்வைப்புகள்,கருத்தமைவுகள், உவமைச் சிறப்புகள், இலக்கியச் சிறப்புகள், சொல்லாட்சிகள், சொல் சிக்கனம், பொதுமை, மதமின்மை, இனமின்மை, இடமின்மை, காலமின்மை, மூடநம்பிக்கையின்மை, அருவருப்பின்மை முதலியன பற்றி ஒருசில கூறுவோம்.

இந்நூலுள், மாந்த வாழ்க்கைக்குத் தேவையான, அறவியல், அரசியல், பொருளியல், குமுகவியல், பொதுமையியல், பொதுவுடைமையியல், மனவியல், மக்கள் மனவியல், உடலியல், மருத்துவவியல், தொழிலியல், தொழில்நுட்பவியல், குடும்பவியல், ஒழுக்கவியல், மெய்யறிவியல், காமவியல்-முதலிய அத்தனைத் துறைகளிலும் மிக மேம்பாடான செய்திகள், மிக நுட்பமாகவும், திட்பமாகவும், செப்பமாகவும், சுருக்கமாகவும் அதே பொழுது விரிவாகவும் எடுத்துரைக்கப் பெறுகின்றன என்பது பற்றி முன்னரே ஒரளவு விளக்கப் பெற்றுள்ளன. இவை பற்றியும் மேலும் ஒருசில விளக்கங்களை இதில் காணலாம்.

மொத்தத்தில், ஒரு நூல் எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது பற்றியெல்லாம் தமிழ் இலக்கண நூலாகிய தொல்காப்பியத்துள், மரபியலில் பலவாறு கூறப்பெற்றுள்ளன.அவற்றுள் மிக முகாமையானது, ஒரு நூல், அதிலும் செய்யுள் வடிவாக, நூற்பா வடிவாக, சூத்திர வடிவாக எழுதப் பெறும் நூலுள் மரபுநிலை பிறழக்கூடாது என்பதாகும். சொல், மொழி, கருத்து, அதை எடுத்துக்கூறும் முறை முதலிய அனைத்து நிலைகளிலும் மரபு - தமிழியல் மரபு - சிதையக்கூடாது, பின்பற்றப் பெறவேண்டும் என்பது. இது பெரிதும் வலியுறுத்தப் பெறுகிறது. ஏனெனில், ஒரு கருத்தை உணர்த்துவதற்கு ஏற்கனவே வழக்கில் உள்ள சொற்கள் சரியான முறையில் பயன்படுத்தப்பெறவேண்டும். இல்லையெனில் அம்மொழியில் பின்வரு பவர்களுக்கு அக்கருத்து சரியான முறையில் சென்றடையாது. பொருள்களில் தவறும் மயக்கமும் பிறழவுணர்தலும் ஏற்படும். எனவே மொழி, சொல், கருத்து, எடுத்துச் சொல்லும் முறை, ஆகியவற்றுள் ஏற்கனவே உள்ள மரபு முறைகள், நூலாசிரியரால், அதுவும் தம் இன மக்களுக்கும், உலக மக்களுக்கும் கூறப்பெறும் செய்திகளில் காலத்திற்கும், இடத்திற்கும் ஏற்பக் குழப்பநிலைகள் தோன்றாவண்ணம் மரபு நிலை பின்பற்றப் பெறவேண்டும் என்று தொல்காப்பியம் பின்வருமாறு வலியுறுத்துகிறது.

'மரபுநிலை திரிதல் செய்யுட் கில்லை
மரபுவழிப் பட்ட சொல்லி னான'

-- தொல் 1590.