திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்
௨௧௯
உள்ளவர்களை, அஃதாவது பல வாழ்க்கைச் சுழற்சிகளிலிருந்தும் தன்னைக் காக்கின்ற தெப்பமாகிய உறவினரை - நண்பர்களை சுற்றியிருப்பவர்களை எரித்துக் கொல்லும் அஃதாவது, சினம் உள்ள அவனை விட்டு, அவர்கள் விலகுவதால், அவனைத் தனிமைப்படுத்தும். எனவே, அவன், தன்னை இக்கட்டுகளிலிருந்து காப்பதற்கும், சினம் கொண்டால் அதைத் தணிவித்துக் காப்பதற்கும், துணையில்லாத தனியன் ஆகிறான்.
3. பின்னர், அவன் தனிமைப்பட்டு நிற்கையில், அந்தச் சினவெழுச்சி நெருப்பு, அவனை வெறுப்புக்குள்ளாக்கி, அவனைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டி அதால் அவனையே அழிக்கும். இம் மூன்று கருத்துகளும், மக்கள் உயிரியக்கக் கோட்பாட்டின் மூன்று அடிநிலை உண்மைகளாகும். இது, திருவள்ளுவர் கூறியது. அவர் கூறுகின் றவரை இதைப்பற்றி யாருக்கும் இவ்வளவு விரிவு விளக்கம் தெரியாது. அஃதாவது எந்த நூலாசிரியரும் இதனை இத்துணைத் துல்லியமாக வரையறுத்துக் கூறிவிடவில்லை.
- அடுத்தபடி, நம் நிலையில், நமக்கும் இதுதான் மிகவும் உண்மை என்று படுகிறது. அதற்கடுத்தபடி, இந்நிலை நமக்கும் சிறிது உள்ளதாக உணர்கிறோம். அதுதான் திருவள்ளுவர்வழி, அவர் கண்களால் நம்மையே நாம் பார்ப்பதாகும். இதைப் போலவே இந் நூலில் கூறப்பெற்றுள்ள அனைத்துக் கருத்துகளும் நம்மை நாமே கண்டுகொள்ள உதவும் கண்ணாடிகளாக உள்ளன என்பதை இதைப்போலவே ஆய்ந்து கண்டு கற்க
திருவள்ளுவர் இதுபோலும் உள்ளத்தின் பண்பியல் கூறுகளைத் தேர்ந்து தெளிந்த முறையில், இந்நூலின்கண் நமக்கு நிறையவே எடுத்துக் காட்டியுள்ளது. அவர்க்குப் பின்னர் வாழும் மாந்த இனத்திற்கே கிடைத்த ஒரு பெரும் பேறாகும். அவர் காலத்திற்கு முன்னர் வாழ்ந்த தமிழினச் சான்றோர்களின் தேக்கம், அவர். அவர் இவ்வாறு கூறும் கருத்துகளில், ஏதும் பிறழ்ச்சியானவற்றையோ, தெளிவில்லாதவற்றையோ காண வியலாது. அவ்வாறு முடிவு செய்வதும் மிகவும் கடினமானது. ஆனால், உலகியல் கூறுகளைத் தெரிவிக்கும் முறையில், அவரும் சில மூட நம்பிக்கைகளுக்கு உட்பட்டிருந்துள்ளார் என்றே கருத வேண்டியுள்ளது. ஆனால், அவர் அவற்றை மிகவும் எச்சரிக்கையாகவே கையாண்டுள்ளார் என்றே சொல்லலாம்.
'திங்களைப் பாம்பு கொள்வது' (1146) 'வித்தாமல் விளையும்' (85) முதலியவற்றை ஓர்க இவற்றுள் முதலது அறியாமையும், பின்னது அளவிறந்த நன்நம்பிக்கைக் கூற்றும் ஆகும் எனலாம்.