பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ௨௨௪

முன்னுரை 


புகட்டல் எண்ணி, அவ் வாழ்வியலுக்கே முதல் அமைப்பாம் இல்லறவியலைக் கூற விரும்பி, அதற்கே அடிப்படையாகவுள்ள இல்வாழ்க்கையின் தேவையினையும் தன்மையினையும், பெருமையினையும் கூறி, அப் பெயரால் அதிகாரம் உரைத்தார்.

இனி, இல்வாழ்க்கைக்கு முழுமுதற் காரணமாக உள்ள மனைவி ஒருத்திக்கு உள்ள சிறப்பியல் குண நலன்களைக் கூறும் முகத்தான் வாழ்க்கைத் துணை நலம் எனும் ஓர் அதிகாரத்தையும்,

அவ் வில்வாழ்க்கையினது பெரும் பயனாக உள்ள மக்கள்பேறு பற்றி விளக்கிட அது பற்றிய ஓர் அதிகாரத்தையும்,

அம் மக்கட் பேற்றின் விளைவினால், கணவன் மனைவி இருவர்க்கும் துளிர் விடும் உயிர்த் தொடர்புக் கூறாகிய அன்பு என்னும் ஒரு மனவுணர்வு துளிர்விடுதலைக்கொண்டு அன்புடைமை என்றோர் அதிகாரத்தையும்,

அவ்வன்புடைமையின் அடிப்படையாகவும், மக்கள்பால் செலுத்தப் பெற்ற அன்பினையடுத்து, அவ்வுணர்வு மலர்ச்சியுற்ற நிலையில், தம் போல் தம்மிடம் தொடர்பு கொள்ளும் பிறிதோர் அன்பிணக்கத்திற்கு உரியதாக வுள்ள விருந்தினை ஒம்புதல் குறித்த விருந்தோம்பல் 'தன்மையை விளக்க அதன் மேல் ஓர் அதிகாரத்தையும்,

அதன்பின்னர் அவ் விருந்து வருங்கால், அதனிடம் ஏற்படும் முதல் தொடர்பில், பரிமாறிக் கொள்ளும் புழக்கத்தில் முதலாகத் தேவைப்படும் உரையாட்டு நிலைகளை விளக்கிக் கூறும் வகையில், இனியவை கூறுதல் எனுமோர் அதிகாரத்தினையும்,

அதனையடுத்து, உரையாட்டும், உண்டாட்டும் முடிந்த நிலையில், அவ்விருந்து விடைபெற்றுச் சென்ற நிலையில், 'உப்பிட்ட வரை உள்ளளவும் நினை' என்னும் பழமொழிக்கு ஏற்ப அவ்விருந்தினர்க்குத் தேவையான நன்றியுணர்வினை விளக்கி நிலைப்படுத்தும் வகையில், செய்ந்நன்றியறிதல் என்னும் ஒர் அதிகாரத்தையும், நிரல் நிறையாகப் புலப்படுத்தினார்.

இனி, நன்றியறிவுணர்வுடைய மக்கள் தம்முள் என்றும் ஒருவர்க் கொருவர், தம்போல் பிறரையும் கருதிச் செயல்படும் நிலையில் அவர்களுக்குத் தேவைப்படும் நடுவு நிலைமை உணர்வை விளக்கிட அதற்கோர் அதிகாரத்தையும்,

நடுவுநிலைமை உணர்வுடைய மக்கள், தங்களுக்குள் மிகையுணர்வு கொள்ளாத வாறு, அடக்கமாக இருத்தல் வேண்டிய கட்டாயத்தைப் புலப்படுத்த அடக்கமுடைமை எனும் அதிகாரத்தால் விளக்கியும்,