பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உருஉ

முன்னுரை



கிபி 5-ஆம் நூற்றாண்டிலேயே கிரேக்க மொழியில் 'திருக்குறளின் திரட்டு' ஒன்று இருந்த்தாகத் திருவனந்தபுரம் இலட்சுமணனார் 50 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்ததாக பர். கத. திருநாவுக்கரசு தம் 'திருக்குறள் விளக்கம்' என்னும் மேற்படி கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

சமய வழிப்பாட்டு நூல்களாக விளங்கும் 'பைபிள்', 'குர்ஆன்' ஆகிய கிறித்தவ, இசுலாமிய நூல்களுக்கு அடுத்தபடி, உலகிலேயே பொது அற நூலாகிய திருக்குறளே மிகுதியான மொழிகளில் பெயர்க்கப் பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இஃதொன்றே அதன் தலைசிறந்த பெருமைக்கும் சிறப்புக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும் - என்றுணர்க.

பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள
நூலெல்லாம் வள்ளுவர்செய் நூலாமோ?

என்னும் கூற்று எத்துணை உண்மையானது!

7. உரைகளும் உரையாசிரியர்களும்:

இனி, திருக்குறளுக்கு இதுவரை வெளிவந்துள்ள உரைகளைப் பற்றியும், உரையாசிரியர்களைப் பற்றியும் சில கருத்துகளைக் கூறியாகல் வேண்டும்.

முதற்கண், நாம் இந்நூலுக்கு உரை செய்வது, நூலாசிரியரின் உள்ளக் கருத்தை, அவர் பயன்படுத்திய சொற்களைக் கொண்டே, நன்கு புலப்படுத்தவே யன்றி, உரையாசிரியனாகிய நம் கருத்தைத் திருக்குறள்வழித் தெரிவிக்க அன்று என்பதை உணர்தல் வேண்டும். இந்நிலைக்குச் சொல்லாய்வுத் திறனும், மொழிநூற் புலமையும், ஒப்பீட்டிலக்கிய ஆய்வும் அடிப்படையாக மிகு தேவையென்க. என்னை?

'கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார்' அகத்து

–717

என்றாராகலின். இனி, இவரன்றிப் பிறரும் அதையே ஒப்பினர்.

'மொழியிலார்க் கேது முதுநூல் தெரியும்
விழியிலார்க் கேது விளக்கு'
நன்னெறி: 15
'பொழிப்பு' அகலம் நுட்பம், நூல் எச்சம்இந் நான்கின்
கொழித்துஅகலம் காட்டாதார் சொற்கள்- பழிப்புஇல
நிறையாமா சேக்கும் நெடுங்குன்ற நாட
உரையாமோ நூலிற்கு நன்கு

-நாலடி 319

என்பன காண்க.

திருக்குறளில் இக்கால் பலரும் ஈடுபாடு கொள்வது ஒரு புறம் மகிழ்ச்சி தருவதேனும், ஒரு புறம் வருத்தமும் தருகிறது. ஏனெனில், ஒரு சிலர் திருக்குறளைத் தப்பும் தவறுமாகப் படிப்பதும், அதை அவ்வாறே பிறரிடத்து எடுத்துப் பரப்பி, அவரவர் விருப்பத்திற்கேற்பப் பொருள் கூறுவதும்,