பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௨௭௧


அதைக் காத்து வைத்துக்கொள்ள முடியுமா? அல்லது அரிசியை ஊறவைத்து ஆட்டி மாவாக்கிச் சுடும் அப்பம், இட்டளி, தோசை முதலியவற்றைச் நம் சுவைக்கு ஏற்பச் செய்துதான் சாப்பிட முடியுமா? எத்தனை நாளைக்குத்தான் சோறாகவே தின்று தெவிட்டியும் சலித்தும் போவது? என்று ஏன் அவர் சிந்திக்கவில்லை? எனவே மூலங்கள் சிதைந்து போகக் கூடாது. அதனின்று வெளிப்படும் பொருள்கள் வேண்டுமானால் சிதைக்கப்பெற்று வேறு வேறு வடிவங்களாகக் காலத்திற்கு ஏற்பக் கருத்துக்கு இசைய, நம் விருப்பத்திற்கு உகந்த வகையில் மாறதலுற்றுக்கொண்டே போகலாம். அதில் பிழையில்லை. அதுதான் இயங்கியல், பொன் என்னும் மூலம் என்றும் மாறக்கூடாது. அதனால் செய்யப்படும் பொருள்கள் நகைகள் மாறலாம். மாற்றப்படலாம். அதை எவரும் தவறு என்றும் சொல்ல முடியாது. ஓர் அறிஞருடைய நூல் அமைப்பும் அப்படிப்பட்டதுதான்.

ஒரு நூலின் பல்வேறு சிறப்புகளில் அமைப்பு நிலையும் ஒன்று. அதுவும் மரபு தழுவியதுதானா. அறம், பொருள், இன்பம் என்பது மரபியல் அமைப்புத்தானே. அதில் என்ன தவற்றை ஆனந்தன் போலும் குறுக்குச் சால் ஒட்டிகள் கண்டனர்;அதைப் புறக்கணிக்க? அதுவும் தமிழியல் மரபுவழிப் பெற்ற திருக்குறளில்..?

மரபு நிலை திரியா மாட்சிய வாகி

உரைபடு நூல்

-தொல் 1593

ஆகிய திருக்குறள் போலும் மெய்ந் நூல்கள் மரபு சிதைக்கப் பெற்றால் அவற்றின் மாட்சி பெருமை குறுகும் என்பது அறிஞர் கருத்து.

மரபு என்பதற்கு இன்னொரு சிறப்பும் உண்டு. மரபு என்பது இலக்கிய இலக்கணச் சான்றோர்கள், அறவியல், வாழ்வியல், குமுகாயப் பெரியோர்கள் முதல் உயர் நன்னெறியாளர்கள் கடைப்பிடித்தொழுகும் வாழ்வியல் நிகழ்ச்சிகளிலிருந்தே மரபு படி நிலை வளர்ச்சி பெற்று வடிவம் எய்துகிறது. அதையே சான்றோர் வழக்கு என நூலாசிரியர்கள் போற்றுகின்றனர்.

வழக்கு எனப் படுவது உயர்ந்தோர் மேற்ற

நிகழ்ச்சி அவர்கட் டாகலான

தொல் 1592

(ஐயா அவர்கள் எழுதிய முன்னுரை இத்துடன் முடிவுறுகிறது. இதற்கு மேல் உள்ள குறிப்புகள் ஐயா அவர்கள் முன்னுரையில் எழுதுவதற்காகக் குறித்து வைத்திருந்தவை)

இலக்கணக் குறிப்புகள் முதலிய யாவும் வரும். இதில் உள்ள குறள் பற்றி