பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௪௭




"எப்பொழுதும் ஒன்றை நினைவில் வைத்திருங்கள். தமிழின் உயர்ச்சி அளவுக்கு நாம் உயர்ந்து போக வேண்டுமே தவிர, நம்மின் தாழ்நிலை அளவுக்கு நம் தமிழையும் தாழ்த்தக்கூடாது. இதை எதிரிகள் பயன்படுத்திக் கொண்டுதான், தமிழை மட்டும் கலப்பாகவும் தாழ்வாகவும் ஆக்கி வருகிறார்கள். நாமும் அவ்வாறு செய்யக்கூடாது. இதனால் நம் மொழிக்கும் நமக்குந்தாம் தாழ்ச்சியே தவிர, நமக்குப் பயன் என்பதே இல்லாமற் போகும்”

"திருக்குறள் அதன் தன்மையில் உலக நூல்கள் யாவற்றினும் உயர்ந்தது. அது தமிழில் உள்ளதால் தமிழுக்கும் பெருமை; தமிழர்க்கும் பெருமை. எனவே அதைத் தமிழில் கற்பதால் கருத்தையும் உணர்கிறோம்; தமிழையும் உணர்கிறோம். அதன் உயர்ந்த கருத்துகளை அறிந்து கொள்வதைப் போலவே, மொழியின் உயர்ந்த தன்மைகளையும் அறிந்து கொள்ள வேண்டாவா?”

"மெய்ப்பொருள் உரை நீங்கள் நினைப்பது போல் அவ்வளவு கடின நடையன்று. அந்த நடைக்காகவே நூலைப் பலமுறை கற்க வேண்டிய இனிய, ஆற்றொழுக்கான அழகிய தனிச் சிறப்பான தூய தமிழ்நடையில் எழுதத் திட்டமிடப்பெற்றது. தமிழின் அத்தகைய நடையை வேறு எந்த மொழியினரும் ஒரு கலங்கரை விளக்கமாகக் காலங் காலத்திற்கும் காண வேண்டும் என்னும் கருத்துக் கொண்டே அவ்வாறு எழுத எண்ணப் பெற்றது. நமக்கது கடினமாக இருந்தால் நாம் மொழிநிலையில் மிகவும் தாழ்ச்சியுற்றிருக்கிறோம் என்று கருதி, இன்னும் உயர முயற்சி செய்ய வேண்டும்.

2. திருக்குறள் - ஒரு பொது மதிப்பீடு:

நம் அருந்தமிழ் மொழியின்கண் தோன்றிய பெருந்தமிழ்ப் பேரறநூலாகிய திருக்குறள் ஒன்றுதான்,

- உலகப் பெருநூல்களையெல்லாம் ஆக்கத்திலும் நோக்கத்திலும் வெல்லும் தரமிக்கது:

- அதற்கு ஒப்பதும் மிக்கதுமாகிய ஒரு பேரறநூல், வாழ்வியல் நூல், பொதுமை நூல், காலத்தையும் இடத்தையும் பொருளையும் இனத்தையும் மதத்தையும் மீறியும் கடந்தும், வென்றும் நிற்கும், ஞாலம் முழுவதற்குமான ஒரு வாலறிவு நூல், இன்றுகாறும் தோன்றியதில்லை, துலங்கியதில்லை என்பது ஒருதலை உறுதி.

- இது, வெறும் பேருணர்வும் பேரவாவும் கொண்டு கூறப்பெறும் கூற்றன்று; பேரறிவும், மாந்தப் பெருநோக்கமும் கொண்டும் கூறும் பேருண்மைக் கூற்றே ஆகும்.