பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௬௧


3. திருவள்ளுவப் பேராசிரியர்:

'திருக்குறள்' எனும் ஒப்புயர்வற்ற நூல் பற்றிச் சிந்திக்கும் பொழுது, அதனை உருவாக்கி தந்த ஆசிரியர்ப் பற்றி எண்ணிப் பாராமல் இருக்க முடியாது. அவரைப் பற்றி எண்ணும் பொழுது ஏற்படுகின்ற அறிவுணர்வும், மலைப்புணர்வும், வியப்புணர்வும், மதிப்புணர்வும், புகழுணர்வும் கொஞ்ச நஞ்சமல்ல.

இதுகாறும் உலகில் பிறந்த மிகச் சிறந்த அறிஞர் பெருமக்களுள் தலைசிறந்த பேரறிஞர், அவர்; மிகவுயர்ந்த சிந்தனையாளர், அவர் மாந்த இனத்தைப் பற்றி மேல் நிலையாகவும் அடியூன்றவும் சிந்தித்த அறிஞர்கள் மிகச் சிலருள் மிகவும் மேம்பட்டு நிற்பவர் அவர். அவர் போலும் மிகச் சிறந்த மாந்த இனக் கூறுகள் அனைத்தையும் அளாவிச் சிந்தித்த - பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் மாந்தன் எதிர்கொள்ளவேண்டிய வாழ்வியற் பாடுகளுள் முழுக் கருத்தையும் ஊன்றி அடிமுடி கண்ட வேறு பேரறிஞர் ஒருவரை வேறு எந்நாட்டிலும் வேறு எம்மொழியிலும் காண இயலவே இயலாது. இவரைப்போல் உள்ள பேரறிஞர்கள் பிறர் ஒரு சிலா், மக்கள் வாழ்வியலின் சில சில கூறுகளையே சிந்தித்து விளைவு கண்டவர்களாகவே காணப்படுகின்றனர். தனியொரு மாந்தனால், இவ்வுலக நிலைகள் பற்றியும், இங்குள்ள மாந்தவுயிரினம் பற்றியும் மேல் எல்லையாக எந்த அளவுவரை சிந்தித்து உண்மைகள் காணமுடியும் என்பதற்குத் திருவள்ளுவரைத் தவிர வேறு ஒருவரை இவ்வுலக மாந்த இனத்துள் எடுத்துக்காட்டாகக் கூற முடியாது என்பதை உறுதியாகச் சொல்லலாம்.

மக்கள் வாழ்வியல் பற்றியும், அதன் தேவை தேவையின்மைகள் பற்றியும், அவற்றின் நன்மை தீமைகள் பற்றியும், முழுமையாகச் சிந்தித்து முடிவு கண்ட பேராற்றல் கொண்டவர் அவர். அவர் ஒரு பெரும் குமுகவியல் சிந்தனையாளர்; அரசியல் பேரறிஞர்; பொருளியல் வல்லுநர்; வாழ்வியல் அறிந்துணர்த்தும் அறவியல் மேதை; தனி மாந்த உளவியலும், பொதுமாந்த உளவியலும், குமுக உளவியலும் உணர்ந்த சிறந்த உளவியல் பேராசிரியர்; மக்கள் உடல் நலக்கூறுகளை அறிந்த மருந்தியல் வல்லுநர்; வேளாண்மைத் திறமுணர்ந்த உழவியல், வேளாண் இயல் திறனாளர்; உயிரியல் ஆய்ந்து நுட்பமான இயக்கக் கூறுகளை முதன்முதலாகத் தெரிவித்த உயிரியக்கவியல் பேரறிவாளர்; உலக இயற்கை நுட்பங்களறிந்த இயல்பியல் அறிஞர்; அறிவியல் அறிஞர்; உலகியல் உணர்ந்த நுண்ணறிவாளர்; என்றும் அழியா ஆற்றல்களை அறிந்துணர்த்திய மெய்ப்பொருள் விண்டவர்; இவையத்தனைத் திறங்களுடனும் ஆண், பெண் காதலையும் ( Love ),