பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௬௨

முன்னுரை 


காமத்தையும் (Sex) உணர்ந்த பாலுணர்வியல் பேரறிஞர்;

இனி, எல்லாவற்றுக்கும் மேலாகச் சொல்வதானால், அவரை ஒரு மாந்தவியல் புரட்சியாளர், மக்களியல் வழிகாட்டி என்றே முற்ற முடிந்த முடிபாகக் கூறிப் பெருமிதம் கொள்ளலாம். சுருக்கமாகக் கூறுவதானால், அவர் மக்கள் தொடர்பாகச் சிந்தித்த எதையும் வேறு எவரும் அவ்வளவு சிறப்பாகச் சிந்தித்ததில்லை; சிந்திக்காத எதையும் வேறு எவரும் சிந்தித்ததாகவும் தெரியவில்லை,

திருவள்ளுவப் பேராசானைப் பற்றி அக்கால முதல் இக்காலம் வரை அனைத்துப் பேரறிஞர்களும் வியந்தும், பெருமிதமுற்றும், புகழ்ந்தும், பாராட்டியும் கூறிய கூற்றுகள் அனைத்தும் மறுக்கவியலாத உண்மைகளே. இவ்வாறு இவ்வுலகத்துப் பிறந்த பேரறிஞர் ஒருவரை, அனைத்துக் கூறினரும், அனைத்துத் துறையினரும், அனைத்து இனத்தினரும், அனைத்துத் திறத்தினரும், ஒப்பி ஒருமுகமாக ஏற்றுக்கொண்டு பாராட்டிப் புகழ்ச்சி செய்த அளவுக்கு, வேறொரு பேரறிஞர் இலர் என்பதே அவர் அனைத்துப் பெருமைக்கும் உரியவர் என்பதற்குப் போதுமான சான்றாகும்.

அப்புகழ்ப் பொன்னுரைகள் அன்றும் இன்றும் என்றுமே உண்மையாகும். அவற்றுள் சில:

"அவனே புலவன்; அவனே அறிஞன்;
அவனே தமிழை அறிந்தோன்”

பெருந்தொகை,

- நன்றென

“எப்பா லவரும் இயைபவே வள்ளுவனார்
முப்பால் மொழிந்த மொழி"

- கல்லாடர்.

"பரந்த பொருளெல்லாம் பாரறிய வேறு
தெரிந்து திறந்தொறும் சேரச் - சுருங்கிய
சொல்லால் விரித்துப் பொருள் விளங்கச் சொல்லுதல்
வல்லார்ஆர் வள்ளுவர்அல் லால்.”

- அரிசில்கிழார்.

"- வள்ளுவனார்

"முப்பாலின் மிக்க மொழியுண்டு எனப்பகர்வார்
எப்பா லவரினும் இல்"

- முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்.