பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/74

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௭௨

முன்னுரை 


கண்ணன்னார் கண்ணும் இரவாத மானம் உடையவர் (1061); தெண்ணீீீா் அடுபுற்கை யாயினும் தாள் தந்தது உண்டு மகிழ்ந்தவர் (1065); தம்மில் இருந்து தமது பாத்து உண்டவர் (1107); அறிதோறும் அறியாமை கண்ட அறிவாளர் (1110); எனப் பலப் பல்வகைப் பெருமையும் திறனும் அறிவாற்றலும் ஒருங்கே பெற்ற மீமிசை மாந்தர் திருவள்ளுவர் பெருமான். அவரைப் போலும் ஒருவரை இவ்வுலகம் இன்னும் கண்டிலது; இனியும் காணுதல் அரிது என்று கூறுதலும் மிகையாகாதென்க.

4. திருவள்ளுவரின் உலகப் பார்வையும்,
அறநோக்கும் நிலை தாழாமையும்:

திருவள்ளுவர், தமிழ் நாட்டில் தோன்றித் தமிழ்மொழி பேசித் தமிழராகவே வாழ்ந்திருந்தவரேனும், தமிழியற் புலவர்கள் வேறு யாவரையும்விட, பொதுமாந்தப் பார்வையும், அஃதாவது உலகப் பார்வையும், அறநோக்கும் உடையவர் என்பது, அவர் நூல் செய்த தன்மையாலும், அவரதனை வகுத்துக்கொண்ட முறையாலும், அவற்றைக் கொண்டு அவர் வெளிப்படுத்திய கருத்துகளாலும் தெரிய வருகின்றது. உலக மக்களை ஒருசேரப் பார்த்தே, அவர்கள் இந்நிலவுலகில் வாழ்ந்து சிறப்பதற்கான வழிமுறைகளையும் நன்னெறிக் கூறுகளையும் வேறு எவரினும் மிகச் சிறப்பாக இந்நூல் முழுவதினும் எடுத்துக் கூறியிருப்பதை எவர் ஒருவரும் மிக வெளிப்படையாகவே உணரலாம்.

பொதுமாந்தப் பார்வை - அல்லது உலகப் பார்வை என்பது, மக்களினம் அறிவுணர்வாலும் பண்புணர்வாலும் மிகவும் படிநிலை வளர்ச்சியும், உலகத் தொடர்பும் மிகுத்துக்கொண்டு, அரசாளுமைப் பரிமாற்றங்கள் நிகழ்ந்து, பொருளுடைமைச் சமநிலைகள் உணரப் பெற்று, மேலை நாடுகளில் பொதுவுடைமைக் கருத்துகள் முதிர்ச்சியுற்ற பின்னரே உலகம் கண்ட ஒன்றாகும். இவ்வுணர்வை ஏறத்தாழ ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழினம் பெற்றிருந்தது என்பது மிகையான கூற்றன்று. அதற்குச் சான்றாகக் கழக நூல்களில் ஏராளமான கருத்துகள் கூறப்பெற்றுள்ளனவேனும், முழுமையாக அப்பார்வை திருக்குறள் ஒன்றிலேயே தெளிவுற அறியக் கிடக்கின்றது.

பிறர் செய்த நூல்கள் யாவும் இயற்கை, வீரம், காதல், வெற்றிச் செய்திகள், சமயக் கோட்பாடுகள் முதலிய பொதுவான கருத்துகளையே கொண்டிருந்தாலும், அவையெல்லாம் உலக மாந்தர் அனைவர்க்கும்